இலங்கை

‘மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன’ – ரிஷாட் எம்.பி குற்றச்சாட்டு!

அதிகாரத்தில் இருக்கும் போது நாம் மக்களுக்கு வழங்கிய ஆயிரக்கணக்கான காணிகள் இன்று வனஜீவராசிகள் மற்றும் வன பரிபாலனத் திணைக்களங்கள் ஆகியவற்றினால் கையகப்படுத்தப்பட்டிருப்பதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மன்னார், முசலி Y.M.M.A கிளையின் ஏற்பாட்டில், சனிக்கிழமை (26) முசலி தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”அதிகாரத்தில் இருக்கும் போது நாம் மக்களுக்கு வழங்கிய ஆயிரக்கணக்கான காணிகள் இன்று வனஜீவராசிகள் மற்றும் வன பரிபாலனத் திணைக்களங்கள் ஆகியவற்றினால் கையகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் முசலிப் பிரதேசத்தில் தற்போது 15 சதவீதமான காணிகளே தற்போது மக்களின் பாவனைக்காக எஞ்சி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்தாவது,

“YMMA என்பது ஒரு பலம்வாய்ந்த நிறுவனமாகும். தேசிய ரீதியில் நல்ல பணிகளை செய்து வருகின்றது. சகோதரர் றிஸ்மி அவர்கள் அதன் தலைவராக இருந்தகாலம் YMMA வுக்கு பொற்காலமாக அமைந்திருந்தது.

ஆன்மீகம், அரசியல், கல்வி மற்றும் சமூக ரீதியிலும் YMMA பல பணிகளையும் வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி, வரலாறு படைத்தது என்பதை நன்றியுணர்வுடன் கூற விரும்புகின்றேன். அதேபோன்று, முசலி பிரதேசத்திலும் நல்ல பல வேலைத்திட்டங்களை YMMA முன்னெடுத்திருந்தது.

முசலி பிரதேசத்தில் குறுகிய காலத்துக்குள் நாம் பல பணிகளையும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தமை வெளிப்படையானது. இந்த வைபவத்தில் பங்கேற்றிருக்கும் ஊர் கனவான்களுக்கு இந்த உண்மை தெரியும்.

அவர்களின் பலர் இதற்கு சாட்சிகளாகவும் உள்ளனர். முசலியில் வானளாவிய ரீதியில் உயர்ந்திருக்கும் மாடிக்கட்டிடங்கள், பாடசாலைகள், மக்கள் குடியிருக்கும் வீடுகள் மற்றும் இன்னோரன்ன பணிகள் வானத்திலிருந்து திடீரென குதித்தவை அல்ல.

See also  இலங்கையில் உயர்ந்து வரும் தங்கத்தின் விலையால் சரியும் விற்பனை : விலை குறைப்பு சாத்தியமாகுமா?

பண்டாரவெளி, கொண்டச்சி, பொற்கேணி ஆகிய பாடசாலைகள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட சாஹிரா, அல்ஜாசிம் ஆகியவை மிகவும் குறுகிய காலத்தில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டவையே. அப்போது, இப் பாடசாலைகளை தடைகள், சவால்கள் மற்றும் கஷ்டங்களுக்கு மத்தியில் நாங்கள் ஆரம்பித்த போது மாணவர்கள் மிகவும் குறைவாகவே இருந்தனர்.

முசலிப் பாடசாலையை தேசிய பாடசாலையாக ஆக்க வேண்டுமென நாங்கள் பகீரத முயற்சிகள் எடுத்தபோது, மாணவர்களின் வரவு குறைவாகவே இருந்தது. எனினும், அமைச்சரவைக்கு விஷேட அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்தே அதில் நாம் வெற்றிபெற்றோம். அப்போது தேசியரீதியில் மூன்று பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. அதில் முசலியும் ஒன்று.

நான் அமைச்சராக இருந்த போது, முசலிப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை மக்களுக்கு வழங்கியதால், வில்பத்துவை அழிப்பதாக என்மீது போலிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு நீதிமன்றம் வரை சென்றது.

வேறு மாவட்டத்தில் மரம் நட வேண்டும் என எனக்கெதிராக தீர்ப்பும் வந்தது. 1100 மில்லியன் ரூபாய்க்கு மரம் நட்டு, பத்து வருடங்களுக்கு அதை பராமரிக்கும் செலவுடன், மொத்தமாக 116 கோடி ரூபா செலுத்த வேண்டுமென தீர்ப்பு வந்தது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக நான் மேன்முறையீடு செய்துள்ளேன். அது குறித்த வழக்கு தொடர்ந்துகொண்டிருக்கிறது.

நான் அமைச்சராக இருந்த காலத்தில், முசலிப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கட்டிடங்களைப் பார்க்கும்போது, உண்மையில் எனக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கின்றது. எனக்கு அந்த சக்தியை தந்த இறைவனுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றி செலுத்துகின்றேன்.

நாங்கள் இந்தப் பிரதேசத்துக்குள் நுழையும் போது, நான்காம் கட்டையிலிருந்து சிலாவத்துறை வரை எங்குமே காடாகவே இருந்தது. மொத்தத்தில் முசலிப் பிரதேசம் முழுவதுமே வனாந்திரமாக காணப்பட்டது. நாங்கள் கால் வைக்கும்போது “கண்ணிவெடி அபாயம் இருக்கின்றது. கால்வைக்க வேண்டாம்” என பொலிஸார் எச்சரித்தனர். ‘பாலைக்குளிக்கு செல்ல வேண்டாம்’ என பொலிஸார் அறிவுறுத்தினர். இந்தப் பிரதேசத்தில் அநேகமான இடங்களில் குடியேற்றம் நடந்த பின்னர் இறுதியாகவே கொண்டச்சியில் மக்களை குடியேற்றினோம். கொண்டச்சி கிராமத்தில் உள்ள நிலக்கண்ணிவெடிகளை அகற்ற விஷேட வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கி, எமது சொந்த நிதியில் கண்ணிவெடிகளை அகற்றி, மக்களை மீள்குடியேற்றினோம். சர்வதேச நிருவனங்கள் பல இருந்த போதும், அவர்கள் கண்ணிவெடிகளை அகற்ற உதவி செய்யவில்லை. காணிகளை அபகரிக்கும் எண்ணமே அவர்களிடம் இருந்தது.

See also  இலங்கை ஜனாதிபதியை சந்திப்பது ஒரு கௌரவம்! இந்திய வெளிவிவகார அமைச்சர்

புதிய பாடசாலைகளை உருவாக்கினோம், ஆசிரிய நியமனங்களை வழங்கினோம், சதிகளுக்கும் தடைகளுக்கும் பின்னாலேயே இந்தப் பணிகளில் வெற்றிபெற்றோம்.

கடந்த 3,4 வருடங்களாக நாம் மிகவும் அமைதியாக இருக்கின்றோம். எவராவது இந்தப் பணிகளை தொடரவேண்டுமெனவே விரும்புகின்றோம். எனினும், நாம் வழங்கிய காணிகளில் பல ஏக்கர்கள் இன்று வனஜீவராசிகள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தட்டிக்கேட்க யாரும் இல்லை. பார்ப்பாரும் கேட்பாரும் அற்ற சமூகமாகவே இந்தப் பிரதேச மக்கள் வாழ்கின்றனர்.

அண்மையில் முல்லைத்தீவிழும் வவுனியாவிலும் பல்லாயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன, ஆனால் முசலிப் பிரதேசத்தில் எதுவுமே விடுவிக்கப்படவில்லை. ஜனாதிபதி காணிகளை விடுவிக்குமாறு கூறுகின்றார். 1984ஆம் ஆண்டுக்கு பின்னர், வர்த்தமானியின் மூலம் கையகப்படுத்தப்பட்ட அனைத்து காணிகளையும் விடுவித்து, மக்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு அவர் கூறுகின்றார்.

அண்மையில் இடம்பெற்ற மன்னார் கூட்டத்தில், முசலிப் பிரதேசத்தில் ஒரு துண்டுக் காணியையேனும் விடுவிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்படவில்லை. இந்த நியாயத்தை நாம் தெரிவித்த போது, கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் 27ஆம் திகதி இதற்கென ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதைப்பற்றி பேசுவோம் என உறுதியளித்தனர். ஆனால், அவ்வாறு முடிவு எடுக்கப்பட்ட போதும் இங்குள்ள உள்ளூர் அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் தலைமறைவாகிவிட்டனர். இதுதான் இன்றைய நிலை.

See also  மோடியின் செய்தியுடன் இன்று இலங்கை வரும் ஜெய்சங்கர்

முசலியில் உள்ள கல்விமான்களும் ஊர்மக்களும் இது தொடர்பில் பேச வேண்டும். இவற்றைத் தட்டிக் கேட்க வேண்டும். நிலத்துக்காகவே வடக்கு, கிழக்கில் போராட்டங்கள் நடைபெற்றன.

1990ஆம் ஆண்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபோது, 15 சதவீதக் காணிகளே வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சொந்தமாக இருந்தது, இன்று நாங்கள் மக்களுக்குக் கொடுத்த காணிகளைக் கூட மீண்டும் வர்த்தமானியின் மூலம் கையகப்படுத்தியுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் 15 சதவீதமான காணிகளே மக்களுக்கு இருக்கின்றது. எஞ்சிய எல்லாவற்றையும் வனஜீவராசிகள் திணைக்களம் அபகரித்து வைத்திருக்கின்றது. ஆனால், சிலர் இவற்றை எல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

பிரதேச செயலாளர் இந்த அநியாயங்களை தொடர்ந்தும் செய்துகொண்டிருக்காமல், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் அமைதியான முறையில், ஜனநாயக ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாவோம் என்பதை ஆணித்தரமா தெரிவித்துக்கொள்கின்றேன். உள்ளூர் அதிகாரிகளின் நிர்வாகக்கெடுபிடிகளால்தான் நமக்கு கஷ்டங்கள் தொடர்கின்றது என்ற உண்மையை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content