இஸ்ரேலின் இராஜதந்திர தனிமை குறித்து கவலைக் கொள்ளும் அமெரிக்கா!
இஸ்ரேலின் வளர்ந்து வரும் இராஜதந்திர தனிமை குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்வின் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நார்வே ஆகியவை பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள நிலையில், அவருடைய இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
காசாவில் இஸ்ரேலிய நடவடிக்கைகள் தொடர்பாக இஸ்ரேலின் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்வதற்கான வாரண்ட் கோருவதற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐ.சி.சி) முடிவுக்கு பதிலளிக்கும் வகையில் பைடன் நிர்வாகம் இந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவுடனான சகஜநிலை ஒப்பந்தத்தை நெதன்யாகு முறியடிக்கக்கூடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச மன்றங்களில் இஸ்ரேலைப் பாதுகாப்பதில் வலுவாக நிற்கும் ஒரு நாடாக, முன்னர் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்த குரல்கள் தற்போது மற்றுமொரு திசையில் நகர்வதை நாங்கள் காண்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கு தற்போது இருக்கும் சிறந்த வழி, காசாவில் ஹமாஸை தோற்கடிக்கும் ஒரு மூலோபாயத்தை இஸ்ரேல் பின்பற்றுவதாகும், அதே நேரத்தில் பொதுமக்களைப் பாதுகாக்கவும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதை உறுதி செய்வதாகவும் கூறினார்.