சிங்கப்பூருக்குள் நாய் – பூனைக் குட்டிகளையும் கடத்த முயன்றவருக்கு நேர்ந்த கதி

சிங்கப்பூருக்குள் நாய் குட்டிகளையும், பூனைக் குட்டிகளையும் கடத்தி முயன்றவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லோங் காய் லாங் என்ற இளைஞர், தனது வாகனத்தில் உள்ள பயணிகள் அமரும் இடத்திற்கு கீழே பெட்டியை வைத்து அதில் 10 நாய் குட்டிகளையும், 3 பூனைக் குட்டிகளையும் வைத்துக் கொண்டு மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுள்ளார்.
அப்போது, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு வந்த லோங் காய் லாங்- கின் வாகனத்தையும் அதிகாரிகள், அதிரடியாக சோதனை செய்தனர். அதில், பெட்டியில் அடைத்து வைத்து 10 நாய் குட்டிகளையும், 3 பூனைக் குட்டிகளையும் சட்டவிரோதமாகக் கடத்தி முயன்றது தெரிய வந்தது.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், லோங் காய் லாங்-கைது செய்தனர். பின்னர், சிங்கப்பூர் நீதிமன்றத்தில் அவரை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவர் மீது 10 குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் முன் வைத்த நிலையில், அனைத்தையும் லோங் காய் லாங் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவருக்கு 40 வார சிறைத் தண்டனையை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, அந்த இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து நாய்க் குட்டிகள் நிமோனியா நோய்த்தொற்றால் இரண்டு வாரங்களில் அடுத்தடுத்து உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.