இலங்கை வந்த சீன போர்க்கப்பல் – தீவிரமாக கண்காணிக்கும் அவதானம்!
சீன மக்கள் குடியரசின் போர்க்கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது.
இது தொடர்பில் இந்தியா அவதானம் செலுத்தியுள்ளது.
சீன இராணுவத்திற்கு சொந்தமான HAI YANG 24 HAO எனும் போர்க்கப்பல் கடந்த வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த கப்பல் இன்று நாடு திரும்பவுள்ள நிலையில், கப்பலின் வருகை குறித்து இந்தியாவின் கவனம் திரும்பியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பாதுகாப்பு நலன்களை பாதிக்கும் எந்தவொரு வளர்ச்சியையும் அரசாங்கம் கவனமாக கண்காணித்து வருவதாக இந்திய வௌிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அரிந்தம் பாக்சி, நாட்டின் பாதுகாப்பு நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு சீன கப்பலொன்று வருகை தந்துள்ளமை குறித்து ஊடகங்கள் வழியாக தாம் அறிந்ததாகவும் இந்திய வௌிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதமும் சீன உளவுக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.