வடகொரியாவிற்கு எதிராக சர்வதேச நாடுகளை அணித்திரட்டும் தென்கொரியா!
வடகொரியாவின் அணுவாயுதத் திட்டத்தைத் தடுக்க சர்வதேச சமூகம் தெளிவான மற்றும் வலுவான உறுதியை வெளிப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் வலியுறுத்தியுள்ளார்.
வட கொரியாவின் ஆயுதக் களஞ்சியம் குறித்த நேட்டோ தலைவர்களுடன் விவாதித்த அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதன் மூலம், இராணுவக் கூட்டணியுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கான தென் கொரியாவின் முயற்சிகளை இது எடுத்துக்காட்டுகிறது.
வடகொரியாவின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அதிபர் யூன் இந்த மாநாட்டின்போது வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட கொரியாவின் அணு ஆயுத முயற்சியை எதிர்கொள்ளும் வகையில் கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும், தடுப்பு திறன்களை மேம்படுத்தவும் தென்கொரிய ஜனாதிபதி முயற்சிப்பதாக சர்வதேச அரசியல் நோக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது. வடகொரியாவின் உளவு விண்கலத்தை செலுத்தும் முயற்சி தோல்வியடைந்திருந்தாலும், இது சர்வதேசத்திற்கான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.