சிறையில் பாலியல் துன்புறுத்தல்: விசாரணை நடத்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
பாலஸ்தீனக் கைதிகளை இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் சிலர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதைக் காட்டும் காணொளி வெளியே கசிந்ததை அடுத்து, அதுகுறித்து அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.
காஸா போரின்போது பிடிபட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் ராணுவ முகாம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனக் கைதி ஒருவரை இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் சிலர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் காட்சிகளைக் காட்டும் காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் காணொளி இஸ்ரேலியத் தொலைக்காட்சியில் (ஒளிவழி 12) ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து இஸ்ரேல் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஆகஸ்ட் 7ஆம் திகதியன்று அமெரிக்கா வலியுறுத்தியது.
“காணொளியைப் பார்த்தோம். தடுத்து வைக்கப்பட்டோர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன,” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறினார்.
இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் தங்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சித்திரவதை செய்ததாகவும் விடுதலை செய்யப்பட்ட பாலஸ்தீனக் கைதிகள் பலர் புகார் அளித்துள்ளனர்.இவற்றை இஸ்ரேலிய அதிகாரிகள் மறுக்கின்றனர்.