Site icon Tamil News

தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு பெட்ரோலிய குழாய்

சமீபகால வரலாற்றில் இலங்கை எதிர்கொண்ட மிகக் கடினமான காலகட்டங்களில் இந்தியா வழங்கிய தளராத ஆதரவிற்காக இந்தியாவுக்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமருடனான பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை பொருளாதார சீர்திருத்தங்களை சீராக அமுல்படுத்தி வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் உள் மற்றும் வெளி தரப்பினரின் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

இலங்கை எதிர்பார்க்கும் வகையில் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை எரிசக்தி மையமாக, கைத்தொழில் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கு கட்டுப்படியாகக்கூடிய மற்றும் நம்பகமான எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு பல உற்பத்திக் கனிமக் குழாய் அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் தனது இந்திய விஜயம் ஒரு பெறுமதியான வாய்ப்பை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தலைமன்னாரம் – ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையேயான பயணிகள் படகுச் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் போக்குவரத்தை மேலும் வலுப்படுத்த முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்திய-இலங்கை உறவுகளுக்கு இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பரந்த பொருளாதார பங்காளித்துவ பார்வை அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே இது இடம்பெற்றுள்ளது.

கடல்சார் விவகாரங்கள், விமானப் போக்குவரத்து உறவுகள், ஆற்றல் மற்றும் சக்தி உறவுகள், வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் நிதி உறவுகள் மற்றும் மக்களிடையேயான உறவுகள் ஆகிய 05 துறைகளில் இந்த கூட்டாண்மை பார்வை அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பரிவர்த்தனைகளுக்கான நாணயமாக இந்திய ரூபாயை நியமிக்கும் முடிவு வலுவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் வணிக உறவுகளை விளைவித்துள்ளது.

வணிகங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் பரிவர்த்தனைகளை மேலும் மேம்படுத்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை செயல்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version