ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் இஸ்ரேல் ரஃபாவிற்குள் நுழையும்! நெதன்யாகு கடும் எச்சரிக்கை
போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும் தெற்கு காஸா நகரமான ரஃபாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்ததுள்ளார்.
“போரின் அனைத்து நோக்கங்களையும் அடைவதற்கு முன்பு நாங்கள் போரை நிறுத்துவோம் என்ற கேள்விக்கு இடமில்லை” என்று நெதன்யாகு தனது அலுவலகத்தின் அறிக்கையின்படி கூறினார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே சுமார் 7 மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 34 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே இருதரப்பினருக்கும் இடையே போர்நிறுத்தம் மற்றும் அகதிகளை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதே சமயம் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கப்போவதாக கூறி உக்கிரமான தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், தனது இலக்கின் இறுதிக்கட்டமாக ரஃபா நகரை குறிவைத்துள்ளது.
ரஃபா நகரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அடைக்கலம் புகுந்துள்ள நிலையில், அங்கு இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தினால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்க ரஃபா நகரின் மீது இஸ்ரேல் ராணுவம் நிச்சயமாக படையெடுக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ரஃபா நகரில்தான் ஹமாஸ் அமைப்பினர் முகாமிட்டு தாக்குதல் நடத்தி வருவதாகவும், போரில் முழு வெற்றியை பெற்றே தீருவோம் எனவும் நெதன்யாகு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.