இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தி காசாவின் பெரிய பகுதிகளை கைப்பற்ற உள்ளது; இஸ்ரேல்

காஸாவில் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதாக இஸ்ரேல் புதன்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்துள்ளது.
பெரும்பாலான பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அது திட்டமிட்டுள்ளது. அதே நேரம் அதிக அளவிலான மக்களை அப்பகுதிகளிலிருந்தும் இஸ்ரேல் ராணுவம் வெளியேற்றி வருகிறது.
இதற்கிடையே, ஹமாஸ் அமைப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் காஸா மக்களை இஸ்ரேல் தலைவர்கள் பாராட்டியும் ஊக்குவித்தும் வருகின்றனர்.
“சண்டை நடக்கும் இடங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும். காஸா மக்கள் ஹமாஸ் அமைப்பை எதிர்க்க வேண்டும், பிணைக் கைதிகளை ஒப்படைக்க வேண்டும். அதுதான் போரை முடிவுக்குக் கொண்டுவரும்,” என்று இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
காஸாவின் தென்பகுதியில் உள்ள ராஃபா, கான் யூனிஸ் பகுதியில் வாழும் மக்களைக் கடலோரப் பகுதியான அல்மாவாசிக்குச் செல்ல இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
ஹமாஸ் கட்டுப்பாட்டில் இன்னும் 59 பிணைக்கைதிகள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுவிக்கும் வரை காஸா மீதான தாக்குதல் நிறுத்தப்படாது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.