காசா சுரங்கங்களில் கடல் நீரை வாரி இறைக்கும் இஸ்ரேல்…
ஹமாஸ் ஆயுதக் குழுவினர் பதுங்கியிப்பதாக கூறப்படும் காசா சுரங்கங்களில் கடல்நீரை இறைத்து, அவற்றை அழிக்கும் பணிகளை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.
வான்படைத் தாக்குதலுக்கு அடுத்தபடியாக, இஸ்ரேல் ராணுவத்தினர் காசா வீதிகளில் இறங்கி நேரடித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் ஹமாஸ் உட்பட இதர ஆயுதக் குழுவினரை பூண்டோடு ஒழிக்க இஸ்ரேல் உறுதிபூண்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் இயங்கும் பகுதி என்று முதலில் வடக்கு காசாவை குறிவைத்து இஸ்ரேல் அழித்தது. இதனையொட்டி பாலஸ்தீன குடிமக்கள் தெற்கு காசாவில் அடைக்கலம் சேர்ந்தனர். ஆனால் அடுத்தகட்டமாக அங்கேயும் தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் மறைந்திருப்பதாக கூறி, மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அகதிகள் முகாம்களையும் இஸ்ரேல் குறிவைத்து அழித்தது. இதற்கு அடுத்தபடியாக காசாவின் தரையடியில் சுமார் 500 கிமீ நீளத்துக்கு வலைப்பின்னலாய் அமைந்திருக்கும் சுரங்கங்கள் மற்றும் பதுங்குமிடங்களை நிர்மூலமாக்க முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய தரைக்கடலில் இருந்து கடல் நீரை இறைத்து சுரங்கங்களில் நிரப்பும் பணிகளை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.
https://twitter.com/i/status/1732453661286990051
முன்னதாக இதே உத்தியை பயன்படுத்தி எகிப்து தேசமும், தங்கள் எல்லைக்குள் நீளும் ஹமாஸ் சுரங்கங்களை அழிக்க முயற்சித்தது. பொதுமக்களின் எதிர்ப்பை தவிர்க்க எகிப்தை வெள்ளம் சூழ்ந்தபோது, இந்த திட்டத்தை முறியடித்தது. ஆனால் ஹமாஸ் போராளிகள் அதனை வெற்றிகரமாக கடந்தனர். சுரங்கங்களில் ஹமாஸ் அமைப்பினர் வைத்திருக்கும் ரகசிய ஏற்பாடுகள் முழுமையாக வெளியுலம் அறியாதது என்பதால், எகிப்தின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
தற்போது அதே உத்தியை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. கடல் நீரை சுரங்கங்களில் நிரப்பிய கையோடு ’பாசி குண்டுகள்’ எனப்படும் தண்ணீரில் பரவித் தாக்கும் நுண்குண்டுகள் சுரங்கங்களில் வீசும் திட்டத்தில் இஸ்ரேல் உள்ளது. முன்னதாக சுரங்கங்களை அழிப்பதற்காக அமெரிக்கா வழங்கிய வெடிகுண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்தி பார்த்தது. அது வெற்றி அளிக்காது போகவே, தற்போது கடல் நீரை சுரங்கத்தினுள் இறைக்கும் பணியில் இறங்கியுள்ளது. இதே சுரங்கங்களில், ஹமாஸ் அமைப்பினர் கடத்திச்சென்ற இஸ்ரேலியர் உள்ளிட்ட பிணைக்கைதிகளை பதுக்கி வைத்திருப்பதால், இஸ்ரேல் பாதுகாப்பு படையின் கடல் நீரை இறைக்கும் முயற்சிக்கு அந்நாட்டில் எதிர்ப்பும் எழுந்துள்ளது.