காஸாவில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 16 பேர் பலி!
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவில் உள்ள பள்ளி ஒன்று தகர்ந்தது.
போரின் காரணமாகத் தங்கள் உடைமைகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கும் சில பாலஸ்தீன குடும்பங்கள், மத்திய காஸா முனையில் உள்ள அல் நுசைராட் பகுதியில் உள்ள அப்பள்ளிக் கட்டடத்தில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 6ஆம் திகதி நடத்தப்பட்ட இத்தாக்குதல் காரணமாக குறைந்தது 16 பேர் இறந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு கூறியது.இறந்தவர்களில் பலர் சிறுவர்கள் என்று அப்பகுதியைச் சேர்ந்த பாலஸ்தீனர்கள் தெரிவித்தனர்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் காஸா சிவில் அவசரநிலை சேவையின் செய்தித் தொடர்பாளர் மஹ்முட் பசால் அச்சம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஹமாஸ் போராளிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதிருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே பள்ளிக் கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அது கூறியது.
அந்தக் கட்டடத்தில் ஹமாஸ் போராளிகள் பதுங்கியிருந்ததாகவும் அங்கிருந்து இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தபட்டடதாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.