இலங்கையில் அதிக முதலீடுகளை செய்யுமாறு இந்திய நாடாளுமன்றம் பரிந்துரை!
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு ஆதரவளிக்கும் வகையில், இந்திய பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் இலங்கையில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என இந்திய நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
நெருக்கடியான காலங்களில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் கடன் மற்றும் நிதி நடவடிக்கைகளை வழங்குவதில் இலங்கை சாதகமாக செயல்பட வேண்டும் என்றும் குறித்த குழு பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து இந்திய மக்களவையின் வெளியுறவுக் குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், 2021 ஆம் ஆண்டில், இந்த நாட்டில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டாளராக இந்தியா 142 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்திய பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் புதிய திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றும், எரிசக்தி, தோட்டங்கள், துறைமுகங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கனிமங்கள் மற்றும் உற்பத்தித் துறைகளில் தங்கள் முதலீடுகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் இந்தியா இலங்கைக்கு உதவ வேண்டும் என்றும் குழு மேலும் பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.