இலங்கைக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இந்தியா
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.
இரு அணிகள் இடையிலான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணி முதல் ஓவரின் முதல் 3 பந்துகளை மட்டும் சந்தித்த நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது.
சுமார் ஒரு மணி நேரம் வரை மழை பெய்தது. தற்போது மழை நின்ற நிலையில், மீண்டும் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மழையால் ஒரு மணி நேரம் ஆட்டம் தடைபட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய அணி 72 ரன்களை 7.3 ஓவர்களுக்குள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு கொடுக்கப்பட்டது.
எனினும், ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் இணைந்து அதிரடி காட்டினர். சூர்யகுமார் 26 ரன்களும், ஜெய்ஸ்வால் 30 ரன்களும் எடுத்து அணிக்கு தங்களது பங்களிப்பை அளித்தனர்.
இறுதியில் இந்திய அணி 6.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்தது. இதன் மூலம் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அத்துடன், 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.