சூட்கேஸுடன் வந்தால், உள்ளே நுழைய முடியாது
குரோஷியாவின் அட்ரியாடிக் கடற்கரையில் டுப்ரோவ்னிக் ஒரு அழகான நகரம். டுப்ரோவ்னிக் அதன் இயற்கை அழகால் மட்டுமல்ல, அதன் வண்ணமயமான கட்டிடக்கலையாலும் வேறுபடுகிறது.
டுப்ரோவ்னிக் ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் டுப்ரோவ்னிக் வருகை தருகின்றனர்.
ஆனால் இப்போது இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒரு விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சக்கரங்கள் கொண்ட சூட்கேஸ்களை நகரத்தின் வழியாக இழுத்துச் செல்லக்கூடாது.
நகரின் கற்கள் நிறைந்த தெருக்களில் சுற்றுலாப் பயணிகள் தங்கள் சக்கர சூட்கேஸ்களை நகர்த்திச் செல்லும் சத்தம் உள்ளூர் மக்களை பாதிக்கின்றது.
சூட்கேஸ்களால் ஏற்படும் ஒலி மாசுபாடு குறித்து மக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து மேயர் மாட்டோ ஃபிராங்கோவிக் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இதன்படி, டூப்ரோவ்னிக் ஓல்ட் டவுன் பகுதியின் தெருக்களில் சக்கர சூட்கேஸ்களை இழுத்துச் செல்வது தடை செய்யப்பட்டது.
சட்டத்தை மீறும் சுற்றுலாப் பயணிகளுக்கு 288 டொலர் அபராதம் விதிக்கப்படும்.
டுப்ரோவ்னிக் சுற்றுலா அலுவலகத்தால் தொடங்கப்பட்ட ‘நகரத்தை மதிக்கவும்’ முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் தங்கள் பைகளை சேமித்து வைக்க நகருக்கு வெளியே ஒரு அமைப்பையும் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த முறை நவம்பர் மாதம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.