அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் படுகொலை திட்டம் – வெளிவரும் பல முக்கிய தகவல்கள்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை கொல்ல முயன்ற துப்பாக்கிதாரி, துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திற்கு முன்னதாக ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தோமஸ் மேத்யூ குரூக்ஸ் என்ற 20 வயது இளைஞன், பென்சில்வேனியாவின் பட்லரில் நடைபெற்ற பேரணியில் முன்னாள் ஜனாதிபதியை கொல்ல திட்டமிட்டிருந்தார்.
அமெரிக்க பாதுகாப்பு முகவர்களால் அவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டொனால்ட் ட்ரம்ப் பேரணியில் உரையாற்றிய இடத்திலிருந்து சுமார் 430 அடி தூரத்தில் அமைந்துள்ள கூரையிலிருந்து சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி அவர் முன்னாள் ஜனாதிபதியை நோக்கி சுமார் ஆறு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரிடம் ரிமோட் மூலம் வெடிக்கக்கூடிய இரண்டு குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
பேரணி நடந்த இடத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் இந்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டு தாக்குதலுக்கு முன்னர் சந்தேக நபர் 50 தோட்டாக்கள் மற்றும் 5 அடி ஏணியை கொள்வனவு செய்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான தோமஸ் மேத்யூ, துப்பாக்கிகளில் ஆர்வமுள்ளவர் என்றும், அரசியலில் வித்தியாசமான கருத்துக்களைக் கொண்டிருந்தார் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, பெரும் சேதத்தை ஏற்படுத்தும் திட்டத்துடன் அவர் வந்ததாக அமெரிக்க பாதுகாப்புப் படையினர் மேலும் தெரிவித்தனர்.