பாகிஸ்தானில் குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் மின்கம்பத்தில் தொங்கிய ஐந்து உடல்கள்!
தென்மேற்கு பாகிஸ்தானில் மின்கம்பத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குண்டுகள் துளைக்கப்பட்ட ஐவரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அரசு அதிகாரிகள் ஆகஸ்ட் 16 அன்று தெரிவித்தனர்.
இஸ்லாமியவாத, பிரிவினைவாத போராளிக் குழுக்கள் நீண்டநாட்களாகத் தாக்குதல் போராட்டங்களை பலுசிஸ்தானில் நடத்தி வருகின்றன. அந்த மாகாணத்தில் ஆப்கானிஸ்தான், ஈரான் எல்லைப் பகுதியில் உள்ள டால்பாண்டின் நகரிலுள்ள ஒரு கல்லூரிக்கு அருகில் அந்த உடல்கள் கண்டறியப்பட்டன.
“குண்டு துளைக்கப்பட்ட ஐந்து உடல்கள் மின் கம்பத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்டன,” என்று அப்பகுதியைச் சேர்ந்த மூத்த அரசாங்க அதிகாரி அத்திக் ஷாவானி, ஏஎஃப்பி செய்தியிடம் கூறினார்.
“உடல்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டன. இறப்புக்கான காரணம் தோட்டாக் காயங்கள் என்று மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர்.”
அந்த நபர்கள் ஆகஸ்ட் 15 அன்று கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவர் கூறினார்.
காணாமல் போனவர்கள் பற்றிய புகார்கள் எதுவும் உள்ளூர் காவல்துறையில் பதிவு செய்யப்படவில்லை என்றும் உயிரிழந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
பாக்கிஸ்தானின் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாகாணமான பலுசிஸ்தான், பல போராளிக் குழுக்களின் இருப்பிடமாக உள்ளது. சில சுதந்திரத்திற்காக அல்லது அவ்வட்டாரத்தின் கனிம வளங்களில் அதிக பங்கிற்காக போராடுகின்றன. பாதுகாப்புப் படைகள் பெரும்பாலும் அவைகளின் வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகின்றன.