உறைய வைக்கப்பட்ட உணவுகளால் உடலில் ஏற்படும் ஆபத்தான பாதிப்பு
இன்றைய துரித கதியிலான வாழ்க்கையில், யாருக்கும் நேரமில்லை. சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்த, சமைப்பதை எளிதாக்க, உறைய வைக்கப்பட்ட பல உணவு வகைகளை நாம் எடுத்துக் கொள்கிறோம்.
நேரத்தை மிச்சப்படுத்த, நறுக்கி உறைய வைக்கப்பட்ட காய்கறிகளையும், உறைய வைக்கப்பட்ட இறைச்சிகளையும் பயன்படுத்துகிறோம். அதுமட்டுமல்லாது இப்போது உறைய வைக்கப்பட்ட சப்பாத்திகள், பரோட்டாக்கள் என தினம் தினம் சந்தையில் புதிதாக ஒன்றை காணலாம்.
வேலைக்கு செல்பவர்கள் மட்டுமின்றி, தனியாக வசிக்கும் கல்யாணம் ஆகாத ஆண்களும், நொடியில் தயார் செய்யும் வகையிலான உறைய வைக்கப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் பிரஷ்ஷாக தயாரிக்கப்பட்ட உணவிற்கு ஈடு இணை இல்லை. உறைய வைக்கப்பட்ட உணவுகளில் ஹைட்ரஜனேற்றப்பட்ட ஏற்றப்பட்ட பாமாயில் பயன்படுத்தப்படுவதால், இது ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
உறைய வைக்கப்பட்ட உணவுகளில் ஊட்டச்சத்து மிக மிக குறைவு. மாவுச்சத்து மற்றும் குளுக்கோஸ் மட்டுமே அதிக அளவில் இருக்கின்றன. மேலும் நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்க இதில் ரசாயனங்கள் மற்றும் பிற பிரசர்வேட்டிவ்கள் சேர்க்கப்படுவதால் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு ஏற்படுகிறது. மேலும் இதிலுள்ள அளவிற்கு அதிகமாக சோடியம், இரத்த அழுத்தம் முதல் இதய நோய்கள் வரை பல பிரச்சனைகளை கொண்டு வரும்.
உறைய வைக்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதால், உடல் பருமன் பிரச்சினை மட்டுமல்ல, கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, இதய நோய்கள் ஏற்படும் அபாயம் ஆகியவை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்ல சர்க்கரை நோய் ஏற்படும் அபாயமும், கடுமையான புற்றுநோய் அபாயமும் பன்மடங்கு அதிகரிக்கிறது.
இதய நோய் ஆபத்து
உறைய வைக்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் இரண்டுமே இதய நோய்களின் அபாயத்தை பெரிதும் அதிகரிக்கின்றன. இதற்குக் காரணம் அதில் உள்ள டிரான்ஸ் கொழுப்புகள். இவை உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் HDL அளவை குறைத்து, கெட்ட கொலஸ்ட்ரால் LDL அளவை அதிகரிக்கிறது. இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கிறது.
புற்றுநோய் ஆபத்து
உறைய வைக்கப்பட்ட உணவுகளை அளவிற்கு அதிகமாக உட்கொள்வதால், புற்றுநோய் அபாயம் அதிகரிப்பதாக உணவியக் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக உறைய வைக்கப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால், கணையத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. தினமும் உறைய வைக்கப்பட்ட உணவு உண்பவர்களுக்கு, புற்றுநோய் அபாயம் 65% அதிகரிக்கும்.
உடல் பருமன்
உறைய வைக்கப்பட்ட உணவுகளில் கொழுப்பு மிக அதிகமாக இருக்கும். இதனால் உடல் பருமன் உண்டாகும். உடல் பருமன் தன்னுடன் பல நோய்களை அழைத்துக் கொண்டு வரும். உறைய வைக்கப்பட்ட உணவுகளின் கலோரிகளும் மிகவும் அதிகம். எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த உணவுகளுக்கு நோ சொல்வது நல்லது. இந்த வகை உணவுகளால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும்.
நீரிழிவு நோய் ஆபத்து
உறைய வைக்கப்பட்ட உணவுகளை தயாரிக்க ஸ்டார்ட் என்னும் மாவு சத்து அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இது உணவிற்கு சுவையை கொடுக்கும். ஆனால் ஜீரணிக்க மிகக் கடினம். இதனால் நீரழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் ஆபத்தாகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் அதிகம்.