ஆஸ்திரேலியாவில் யூதர்கள் மீது தொடரும் தாக்குதல்: வீடுகள், கார்களில் வாசகங்கள்

ஆஸ்திரேலியாவில் அண்மை காலமாக யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சிட்னி நகரில் சில கார்களிலும் வீடுகளிலும் யூதர்களுக்கு எதிராக வாசகங்கள் கிறுக்கப்பட்டிருந்ததாக அந்நகரக் காவல்துறை பிப்ரவரி 2ஆம் திகதி தெரிவித்தது.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரத்தில் யூதர்களைக் குறிவைத்து நடந்த சம்பவங்களில் இது சமீபத்தியது.
இதுபோன்று அண்மை மாதங்களாக அந்நாட்டில் யூதர்கள்மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அச்சமூகத்தை மிகவும் கவலையடையச் செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல்,இஸ்ரேலின் விமர்சனங்களுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆளானது.
இவை அனைத்தும் இவ்வாண்டு மே மாதத்திற்குள் மறுதேர்தலுக்கான வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், ஒரே இரவில் யூதர்கள் அதிகம் வாழும் சிட்னியின் கிழக்குப் பகுதியில் அச்சமூகத்திற்கு எதிரான வாசகங்களைக் கிறுக்கி வீடுகள் மற்றும் வாகனங்களை நாசக்காரர்கள் சேதப்படுத்தியதாகக் காவல்துறை தெரிவித்தது.
ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்சில் யூதர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை அடையாளம் காண கடந்த டிசம்பர் மாதம் சிறப்புக் குழு ஒன்றை அம்மாநிலக் காவல்துறை அமைத்தது.
அந்தச் சிறப்பு குழுவில் இருக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையை 40 ஆக இரட்டிப்பாக்கிய அடுத்த நாள் சிட்னியில் நாசக்காரர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.