முடி வளர்ச்சிக்கு உதவும் சின்ன வெங்காயம் – எப்படி பயன்படுத்துவது?
பெண்ணோ… ஆணோ… எவராக இருந்தாலும் அவர்களின் ஹேர் ஸ்டைல் அழகைத் தருவதாக அமைந்தால் அனைவரும் வியந்து பாராட்டுவார்கள். சிலர் அழகான தலைமுடிக்காக எதுவும் செய்யத் தயாராக இருப்பார்கள். கருகரு முடிதான் ஒருவருக்கு அழகைத் தருகிறது. அந்த முடியை பராமரிக்க உதவுவதில் சமையலுக்கு பயன்படுத்தும் சின்ன வெங்காயமும் ஒன்று என்றால் வியப்பு வருகிறதா?
அந்தக் காலத்தில் நம் பாட்டிமார்கள் தலையில் பூஞ்சைத் தொற்றினால் அரிப்பு என்றால் உடனே இரண்டு சின்ன வெங்காயத்தை உழித்து அதன் சாற்றை தலையில் வைத்து அழுத்தி தேய்ப்பதை பார்த்திருக்கிறோம். அன்று பாட்டிமார்கள் செய்த விஷயம் இன்று விஞ்ஞான பூர்வமாக நிரூபித்து மருத்துவமும் இதை ஆதரிக்கிறது என்பதற்கு சாட்சிதான் சந்தைகளில் கிடைக்கும் வெங்காயச்சாறு கலந்த ஷாம்பூக்கள்.
தகுந்த முறையில் பயன்படுத்தும்போது சின்ன வெங்காயசாறு தலைமுடி உதிர்வைத் தடுப்பதுடன், முடியின் வேரை வலுப்படுத்தி, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. காரணம் சின்ன வெங்காயத்தில் உள்ள கந்தகம் (சல்பர்) என்னும் வேதிப்பொருள் இருப்பதே. இது முடி வளர்ச்சிக்கு உதவும் அவசியமான புரதம் ஆன கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் சின்ன வெங்காய சாற்றில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால் பொடுகு போன்ற தொற்றுக்களை நீக்கவும் உதவுகிறது.
சின்ன வெங்காயம் அதிகப்படியான முடி கொட்டுதல் பிரச்சனை உள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைகிறது. இவர்கள் தாராளமாக அந்த இடத்தில் சின்ன வெங்காயச் சாறை பயன்படுத்தி முடி கொட்டுதலை தடுத்தும், புதிய முடிகளை வளரச் செய்தும் பயன்பெறலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து முடியை பாதுகாக்க உதவுகிறது. மேலும் சிலருக்கு வயது ஆவதற்கு முன்பே முடி நரைக்கும் பிரச்சனை உண்டு இதை தடுக்கவும் சின்ன வெங்காயச்சாறு உதவுகிறது. நம் உச்சம் தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் கலவைகள் வெங்காயச் சாற்றில் உள்ளன மேலும் முடி வளர்ச்சிக்கு உதவும் மயிர் கால்களுக்கு முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை வழங்குகிறது.
சரி வீட்டிலேயே வெங்காயச்சாறு எடுத்து எப்படி பயன்படுத்துவது? ரொம்ப சிம்பிள். ஒரு கைப்பிடி அளவு அல்லது தேவைப்படும் சின்ன வெங்காயத்தை எடுத்துக்கொண்டு அதை தோல் உரித்து மண் போக நன்கு கழுவிக்கொண்டு மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி கிடைக்கும் சாறை எடுத்து நேரடியாகவும் தலையில் தடவி 30 நிமிடம் கழித்து அலசலாம்.
அல்லது தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து வேசாக சூடுபடுத்தியும் முடியில் வேர்க்கால்களில் படுமாறு தடவி மசாஜ் செய்யலாம். இந்த சின்ன வெங்காய சாற்றுடன் தேன் அல்லது கற்றாழை ஜெல் போன்றவற்றைக் கலந்து ஹேர் பேக் போல் முடிக்கு போட்டு பின் குளிக்கலாம்.
முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர இதை டிரை செய்யுங்கள்.ஒரு டேபிள் ஸ்பூன் அளவு வெங்காயச் சாற்றுடன், தேங்காய் எண்ணெய் மற்றும் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்துக் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்கின்றனர்.
வெங்காயச்சாறு தயாரிக்கும் போது நறுக்கிய சின்ன வெங்காயத்தை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வெங்காயம் நன்கு வெந்து அதில் உள்ள சாறு வெளியேறி நீர் குறைந்ததும் அந்த நீரை வடிகட்டியும் முடிக்கு அப்ளை செய்வது இன்னொரு முறை. வெங்காயத்தை மைய அரைத்து அப்படியே பேக் போட்டுக் குளித்தாலும் முடிக்கு ஊட்டச்சத்து தரும். இப்படி பல முறைகள் உள்ளன.
குறிப்பாக வெங்காயத்தின் மணம் அருகில் உள்ளவர்களுக்கு சங்கடத்தை தரும் என்பதால் கூடுமானவரை இந்தச் சாறைத் தடவி தனியே இருந்து தலைக்கு குளிப்பது நல்லது.
எதுவாக இருந்தாலும் அலர்ஜி அல்லது தொற்று பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில் மருத்துவர் அல்லது அழகுக்கலை நிபுணர் ஆலோசனைப்படி பயன் படுத்துவதே சிறந்தது.
வெங்காயம் விற்கும் விலையில் சமையலுக்கே பார்த்துப் பார்த்து பயன்படுத்துகிறோம் என்ற கருத்து இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள். ஆம் அழகுக்கலை நிலையங் களுக்கு செல்லும் நேரமும் பணமும் மீதமாகும் இந்த வெங்காய சிகிச்சையினால் என்பது உண்மையே.