ஆஸ்திரேலியாவில் பொலிஸ் அதிகாரி மீது கூரிய ஆயுத்தால் பலமுறை தாக்குதல்!
காவல்துறை அதிகாரியின் தலையைப் பலமுறை கத்தியால் குத்தியதன் தொடர்பில் 33 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் இச்சம்பவம் இன்று (19)பகல் 1 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஹைட் பார்க் அருகே போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளை, சமையலுக்குப் பயன்படுத்தும் 30 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்தியுடன் நபர் ஒருவர் வழிமறித்ததாக நம்பப்படுகிறது.
அதிகாரிகளுக்கு அருகே சென்று எதுவும் பேசாமல் அதிகாரி தலையின் பின்பக்கத்தில் கத்தியைக் கொண்டு அந்த நபர் பலமுறை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
காயமுற்ற அதிகாரியும் பெண் அதிகாரி ஒருவரும் அவரை துரத்த முயன்றனர்.பின்னர், ஹைட் பார்க்கில் மற்ற காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் அந்த நபரை டேசர் துப்பாக்கியால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கைதாகும்வரை அந்த நபர் அந்தக் கத்தியைக் கையில் வைத்திருந்ததாகவும் தன்னை அதிகாரிகள் சுட வேண்டும் என்று அவர் கோரியதாகவும் துப்பறியும் கண்காணிப்பாளர் மார்டின் ஃபைல்மேன் கூறினார்.
மருத்துவமனை மதிப்பீட்டுக்காக காவல்துறை கண்காணிப்புடன் அந்த நபர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து, உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் அதிகாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.