சேப்பாக்கம் மைதானத்தில் அஸ்வின் படைத்த அபார சாதனை
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வெற்றி பெற்ற வங்கதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, பேட்டிங் இறங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. ரோகித், விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோர் மோசமான ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் ஓப்பனிங் இறங்கிய ஜெய்ஷ்வால் சிறப்பாக ஆடி 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ரிஷப் பந்த் 39 ரன்கள் எடுத்தார். இருவரும் மிடில் ஆர்டரில் அமைத்து சிறிய பார்ட்னர்ஷிப் இந்திய அணியை மோசமான இடத்தில் இருந்து நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர்.
அதன்பின்னர், பின் வரிசையில் இறங்கிய அஸ்வினும், ஜடேஜாவும் நங்கூரம் போல் நிலைத்து நின்று விளையாடினர். அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வங்கதேச அணியை அலையவிட்டனர்.
சிறப்பாக ஆடிய அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 6வது சதம் அடித்து அசத்தினார். சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் மட்டும் இது அவருக்கு இரண்டாவது சதமாகும்.
தமிழ்நாட்டு பிளேயரான அஸ்வின் சதமடித்ததும் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். மறுமுனையில் ஜடேஜாவும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட் இருந்த நிலையில், இருவருக்கும் மேற்கொண்டு ஒரு விக்கெட்கூட விழாமல் பார்த்துக் கொண்டனர். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.
அஸ்வின் – ஜடேஜா கூட்டணி 7வது விக்கெட்டுக்கு மட்டும் 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இது சர்வதேச டெஸ்ட் போட்டியில் 7வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிக ரன்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.
நாளை இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது நாள் போட்டி நடைபெற இருக்கிறது. அஸ்வின் – ஜடேஜா இருவரும் இந்திய அணியின் இன்னிங்ஸை தொடங்க இருக்கின்றனர்.