Site icon Tamil News

66வது கிராமி விருதுக்கான பரிந்துரையில் பிரதமர் நரேந்திர மோடி இயற்றிய பாடல்

66வது கிராமி விருதுக்கான பரிந்துரையில், பிரதமர் நரேந்திர மோடி இயற்றிய ‘அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ்’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளதாக கிராமி விருதுகள் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்குமுள்ள இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் போன்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் 2024ம் ஆண்டிற்கான 66வது ‘கிராமி விருதுகள்’ இன்னும் 85 நாட்களில் நடைபெற இருப்பதாக தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளது. விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை அவ்வப்போது விருதுக்கான குழு வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் ‘அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ்’ பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் கிராமி விருது ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை இந்திய-அமெரிக்க பாடகர் ஃபால்குனி ஷா, பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து சிறு தானியங்களை மேம்படுத்துவதற்காக இயற்றியுள்ளார்.

இந்த பாடல் சிறந்த உலகளாவிய இசை செயல்திறன் பிரிவின் கீழ் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பையில் பிறந்த பாடகர்-பாடலாசிரியர் ஃபால்குனி ஷா மற்றும் அவரது கணவர் மற்றும் பாடகர் கௌரவ் ஷா ஆகியோர் ஒன்றிணைந்து இந்த பாடலை வழங்கியுள்ளனர்.

இந்த பாடலில் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் அவர் பேசியதாவது, ‘உலகம் இன்று ‘சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டு’ கொண்டாடும் வேளையில், இந்தியா சிறு தானியங்கள் பயன்பாடு குறித்த பிரச்சாரத்தில் முன்னணியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகள் மற்றும் குடிமக்களின் முயற்சியால், ‘ஸ்ரீ அன்னா’ இந்தியா மற்றும் உலகத்தின் செழுமைக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கும்,’ என்று கூறினார்.

Exit mobile version