காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 102 ஐ.நா பணியாளர்கள் மரணம் !
ஐ.நா. நடத்தும் மருத்துவமனைகள், பள்ளிகளை இஸ்ரேல் ராணுவம் நேரடியாக தாக்கியுள்ளதாக ஐ.நா.வின் மீட்பு மற்றும் நிவாரண அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 102 ஐ.நா. பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
டாங்கிகளுடன் தங்களது வளாகத்திற்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. அங்கு தங்களது தளவாடங்களை அமைத்து அங்கு பணியில் இருப்பவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாகவும் ஐ.நா. வேதனை தெரிவித்துள்ளது. ஐ.நா. நடத்தும் மருத்துவமனையில் நடத்தபட்ட தாக்குதலில் 5 பேர் கொல்லபட்டதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
பொதுமக்கள் மீது தக்குதல் நடத்தபடுவது பன்னாட்டு விதிகளை மீறும் செயல் என ஐ.நா.வின் மீட்பு மற்றும் நிவாரண அமைப்பு கூறியுள்ளது. காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லபட்ட 102 ஐ.நா. பணியாளர்களுக்கு ஐ.நா. அவையில் இரங்கல் தெரிவிக்கபட்டது. ஐ.நா. பொது அவையில் உள்ள கொடி கம்பத்தில் ஐ.நா.வின் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடபட்டு மரியாதை செலுத்தபட்டது.
காசாவில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு உயிர்நீத்த ஐ.நா.பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவிக்கபட்டது. ஐ.நா. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று ஐ.நா.வின் பிற அலுவலகங்கள் முன்பும் அரை கம்பத்தில் கொடி பறக்கவிடப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
கடந்த அக்டோபர் 7ம் திகதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.
தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் காசாவின் மிகப்பெரிய மருத்துவமனை கிட்டத்தட்ட ஒரு கல்லறை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மருத்துவமனை வளாகத்திலேயே அதிகப்படியாக குவிந்துள்ளது. தொடரும் போர் சூழல் அங்குள்ள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.