டேங்கர் லாரி விபத்து-கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியேறியது
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு கோவை மாவட்டத்திற்கு சோடா தயாரிப்பு தொழிற்சாலைக்கு வேண்டி கார்பன் டைஆக்சைடு எனப்படும் கரியமில வாயு கொண்ட டேங்கர் லாரி கோவை நோக்கி வந்துக்கொண்டிருந்தது.
அப்போது, திருச்சூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வட்டப்பாரா என்னும் இடத்தில் வந்துக்கொண்டிருந்தபோது, கோவை நோக்கி சென்றுக்கொண்டிருந்த பின்னால் வந்த காய்கறி கொண்டு செல்லும் காலியான மினி லாரி மோதியது.
கார்பன் டை ஆக்சைடு ஏற்றி வந்த டேங்கர் லாரியின் பின்புறத்தில் மோதியதில், டேங்கர் லாரியின் பின்புற குழாய் வெடித்து கரியமில வாயு வெளியேறியது. எரிவாயு கசிவு காரணமாக, கோவை திருச்சூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் எரிவாயு கசிவை கட்டுப்படுத்த முயன்றனர். இதற்கிடையே, காவல்துறையினர், வாகனங்களை நீண்ட தொலைவில் நிறுத்தி போக்குவரத்தை தடை செய்து கண்காணித்து வந்தனர். ஆனால், தீயணைப்புத் துறையினர் கட்டுப்படுத்தும் முன்பே, டேங்கர் லாரியிலிருந்து கரியமில வாயு முற்றிலும் வெளியேறியது.
பின்பு சுமார் 2 மணி நேரம் கழித்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. கரியமில வாயு என்பது புகை தான் என்றும், எளிதில் காற்றில் கலந்து விடும் எனக்கூறும் மருத்துவர்கள், அதனால் மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்கிறார்கள். விபத்துக்குள்ளான வாகனத்தில் கரியமில வாயு இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாறு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.