அமெரிக்கா – பாகிஸ்தான் நெருக்கம் – சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த ட்ரம்ப்பின் நகர்வு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பின்னர், பாகிஸ்தானுடன் உள்ள நட்புறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் உலக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளன.
சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவிகளை பாகிஸ்தான் எளிதாகப் பெறும் வகையில், அமெரிக்கா திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் எண்ணெய் வளங்களை மேம்படுத்த உதவுவோம் என டிரம்ப் ஆட்சியாளர்கள் கூறியதும், இந்த நெருக்கம் மீதான சந்தேகங்களைத் தூண்டியுள்ளது.
இதற்கெல்லாம் சிகரமாக, பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனீர் வெள்ளை மாளிகைக்கு நேரடியாக அழைக்கப்பட்டு விருந்து அளிக்கப்பட்டது, உலக அரசியல் வட்டங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் சீனா மிகப்பெரிய முதலீடுகளை செய்துள்ள நிலையிலும், டிரம்ப்பின் இந்த அணுகுமுறை புதிய சக்திநிலைகளை உருவாக்கக்கூடியது என மதிப்பீடுகள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில், ஒரு பிரபல பத்திரிகையில் அமெரிக்கா–பாகிஸ்தான் உறவுகள் குறித்து விரிவான கட்டுரை வெளியாகியுள்ளது. அதில்,
இந்த புதிய நெருக்கம் இந்தியா மற்றும் சீனாவையே மட்டுமல்லாமல், மத்திய கிழக்கு அரசியலையும் பாதிக்கக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச உறவுகள் குறித்த மையம் என்ற சீனாவின் ஒரு ஆய்வு நிறுவனம், பாகிஸ்தான் அமெரிக்க நட்புக்காக சீனாவை புறக்கணிக்கமாட்டாது எனத் தெரிவித்துள்ளது.
மேலும், தெற்காசிய பொருளாதார விவரங்களுக்கான மையத்தின் நிபுணர்,
“அமெரிக்கா – பாகிஸ்தான் நட்பு என்பது தற்காலிகம் மட்டுமே. இது பாகிஸ்தான் – சீனா உறவை பாதிக்க முடியாது, ஏனெனில் அந்த உறவு வலுவான அடித்தளத்தைக் கொண்டது” எனக் கூறியுள்ளார்.