அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் மீது டிரம்ப் இனவெறி கருத்து… ட்ரம்பின் சர்ச்சை பேச்சு
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், தம்மை கறுப்பினப் பெண்ணாக அடையாளப்படுத்திக்கொள்வது குறித்து அந்நாட்டின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் ரீதியாக முன்னணி வகிக்கவே ஹாரிஸ் தம்மை கறுப்பினத்தவராக அடையாளப்படுத்திக்கொள்வதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். புதன்கிழமையன்று (ஜூலை 31) கறுப்பின செய்தியாளர்களின் முன்னிலையில் டிரம்ப் இவ்வாறு பேசினார்.
“முன்னதாக இந்தியராக இருந்தார். பிறகு திடீரென கறுப்பினத்தவராக மாறிக்கொண்டார்,” என்றார் டிரம்ப். ஹாரிசின் தாய் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர். அவரின் தந்தை கறுப்பினத்தவர். ஹாரிஸ் என்றுமே கறுப்பினப் பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டவர். அவர், தமது கறுப்பின, தெற்காசிய அடையாளங்கள் இரண்டையும் பலகாலமாக ஏற்றுக்கொண்டு வந்துள்ளார்.
ஹாரிஸ், ஹவர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர். ஹவர்ட், பொதுவாக கறுப்பினத்தவர் பயிலும் கல்வி நிலையம் ஆகும்.மேலும், பல்கலைக்கழகத்தில் பயிலும் கறுப்பினப் பெண்களுக்கான முதல் ‘சொரோரிட்டி’ சங்கத்திலும் அவர் உறுப்பினரானார். அதன் பெயர் ‘அல்ஃபா காப்பா அல்ஃபா’.
2000ஆம் ஆண்டுகளில் ஹாரிஸ் அரசியலில் முத்திரை பதிக்கத் தொடங்கினார். அப்போதிருந்தே அதுபற்றி வெளியான செய்திகளில் அவரின் கறுப்பின, தெற்காசிய அடையாளங்கள் குறிப்பிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகாகோ நகரில் உள்ள தேசிய கறுப்பின செய்தியாளர்கள் சங்கத்தில் டிரம்ப், ஹாரிசின் இனம் சார்ந்த அடையாளத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பினார். திரண்டிருந்தோர் சிலர், அவரின் கருத்துகளைக் கேட்டு எதிர்ப்பு முழக்கமிட்டனர்.
டிரம்ப்பின் குற்றச்சாட்டுகளுக்கு ஹாரிஸ், கவனமான முறையில் பதிலளித்தார். டிரம்ப்பின் நடத்தை, என்றும்போல் மரியாதையற்ற, பிரிவைத் தூண்டும் வகையில் இருந்ததாக அவர் கூறினார்.
“நம்மிடையே உள்ள வேறுபாடுகள் நம்மைப் பிரித்துவிடாது என்பதை உணரும் தலைவர்தான் நமக்குத் தேவை. வேறுபாடுகளே நமக்கு வலுசேர்க்கும் அம்சங்களில் முக்கியமானதாகும்,” என்றார் ஹாரிஸ்.
அதிபர் தேர்தல் பிரசாரத்தில் இதற்கு முன்பு பொதுவாகத் தமது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் மக்களுக்கு முன்னிலையில் மட்டுமே பேசியிருந்த டிரம்ப், சிகாகோவில் மாறுபட்ட சூழலை எதிர்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.