உச்சவரம்பை எட்டிய அமெரிக்க எச்-1பி விசா விண்ணப்பங்கள்!
எதிர்வரும் 2024-ம் நிதியாண்டிற்கான அமெரிக்க எச்-1பி விசாவுக்கான உச்சவரம்பை எட்டுவதற்கு தேவையான அளவு விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனங்களில் தொழில்நுட்ப நிபுணத்துவம் கொண்ட சிறந்த திறமையாளர்கள் தங்கள் நாட்டில் வந்து பணிபுரிய வசதியாக, அந்நாட்டு அரசால் குடியுரிமை அல்லாத எச்-1பி விசா வழங்கப்படுகிறது.
அமெரிக்க அரசு எச்-1பி விசா விதிகளில் திருத்தம் கொண்டு வந்த பிறகு, அதன் ஆண்டு வரம்பு 65,000 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் கணிசமான அளவு இந்தியர்கள் அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் வெளியிட்ட அறிக்கையில், 2024 நிதியாண்டிற்கான வரையறுக்கப்பட்ட வழக்கமான 65,000 எச் -1 பி விசா வரம்பு மற்றும் அமெரிக்க முதுகலை பட்ட படிப்புக்கான 20,000 எச் -1 பி விசா விலக்கு ஆகியவற்றின் மூலம் அடுத்த நிதியாண்டிற்கான போதுமான எண்ணிக்கையிலான விசா விண்ணப்பங்களைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பதிவு செய்தவர்களுக்கு அவர்களின் விண்ணப்ப நிலை குறித்து ஆன்லைன் கணக்குகள் மூலம் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.