ஈரானில் இரண்டு பெண் ஊடகவியலாளர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை
ஈரானில் இரண்டு பெண் ஊடகவியலாளர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பொலிஸ் காவலில் இறந்த மாஷா அமினி குறித்த செய்தியை வெளியுலகிற்கு கொண்டு வந்த இவர்கள் மீது அமெரிக்க அரசுடன் ‘ஒத்துழைப்பு’ உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஈரானின் சர்ச்சைக்குரிய ஆடைக் கட்டுப்பாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குர்திஷ் பெண் மாஷா அமினி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பொலிஸ் காவலில் இறந்தார்.
மாஷா அமினி சரியான தலைக்கவசம் அணியாததால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக நிலோபர் ஹமேடி செய்தி வெளியிட்டார்.
மேலும் மாஷா அமினியின் இறுதி ஊர்வலம் குறித்த செய்தியை இளகே முகமதி வெளியிட்டார். மாஷா அமினியின் மரணம் ஈரானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட செய்தியாளர்கள் இருவரும் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அமெரிக்க அரசாங்கத்துடன் ஒத்துழைத்தமை, தேசிய பாதுகாப்பிற்கு எதிராக செயற்பட்டமை மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் தெஹ்ரான் நீதிமன்றம் இருவருக்கும் ஏழு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
நீதித்துறை செய்தி இணையத்தளமான ‘மைஷன்’ இதனை தெரிவித்துள்ளது.
இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் 20 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். இந்த இரு ஊடகவியலாளர்களுக்கும் அமெரிக்கா கடந்த மே மாதம் பத்திரிகை சுதந்திர விருதை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.