மூளையில் சிப் பொருத்தி பார்வையற்றவர்களுக்கு பார்வைத் திறன் பெற வைக்க முயற்சி
மூளையில் சிறிய அறுவை சிகிச்சை மூலமாக சிப் ஒன்றை பொருத்துவதால் கண் பார்வையற்றவர்கள் பார்வைத் திறன் பெறும் சோதனையில் இப்போது மனிதர்கள் பங்கேற்றுள்ளனர்.
தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியினால் மருத்துவத் துறையிலும் பல முன்னேற்றங்கள் நடந்து வருகின்றன. தொழில்நுட்பத்தைக் கொண்டு மேலும் பல ஆராய்ச்சிகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில்தான், தொழில்நுட்பத்தின் உதவியால் பார்வையற்றவர்களும் பார்வை பெறும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுளளனர்.
மூளையில் வயர்லெஸ் சாதனம்(சிப்) ஒன்றை வைப்பதன் மூலமாக பார்வையற்றவர்களுக்கு பார்வைத் திறன் கொண்டுவரும் ஆராய்ச்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வைட்டமின் டி மாத்திரைகளை எப்படி உட்கொள்ளலாம்?
சிகாகோவைத் தலைமையிடமாகக் கொண்ட இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் நடைபெறும் ஆராய்ச்சியில் பிரையன் பஸ்ஸார்டு என்பவர் சோதனையில் முதல் நபராக பங்கேற்றுள்ளார்.
தனது 16 வயதில் இடது கண்ணில் பார்வையை இழந்த பஸ்ஸார்டு, 48 வயதில் வலது கண்ணிலும் பார்வையை இழந்தார். தற்போது அவரது மூளையில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலமாக 24 சிறிய சிப்புகள் பொருத்தப்பட்டு கண்காணிப்பில் இருக்கிறார்.
இந்த ஆய்வின் மூலமாக சில பத்தாண்டுகளில் பார்வையற்றவர்களுக்கு பார்வைத் திறன் கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். மூளையில் பொருத்தப்பட்ட சிப்புகளின் மூலமாக ரேடார் திரையில் மனிதர்களையும் பொருள்களையும் வெள்ளை மற்றும் நிறமற்ற புள்ளிகளாக பார்க்க முடியும். பார்வைத் திறனுக்காக உலகம் முழுவதும் நடைபெறும் சோதனைகளில் சிகாகோ சோதனை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
நாட்டில் 50% அரசு மருத்துவர்களின் பரிந்துரைகள் விதிமுறைப்படி இல்லை: ஆய்வு
ஸ்பெயினில், மிகுல் ஹெர்னாண்டஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நான்கு பேருக்கு இதுபோன்று சிப்களை பொருத்தியுள்ளனர்.
கலிபோர்னியாவில் உள்ள கார்டிஜென்ட் என்ற நிறுவனம், தன்னார்வலர்கள் 6 பேருக்கு பொருத்தப்பட்டுள்ள ‘ஓரியன்’ என்ற சாதனத்தை உருவாக்கி வருகிறது. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க்கின் ‘நியூராலிங்க்’ என்ற நிறுவனமும் இதில் இறங்கியுள்ளது.
முதலில் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு சோதிக்கப்பட்ட நிலையில் மனிதர்களிடம் சோதனை செய்ய அனுமதி பெற்றுள்ளது. ‘பிளைண்ட்சைட்’ எனப் பெயரிடப்பட்ட சாதனம் குரங்குகளில் நல்ல முடிவுகளைத் தந்ததாகக் கூறப்படுகிறது. இது மனிதர்களிடம் பார்வைத் தரத்தை மேலும் அதிகப்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஏற்கெனவே கண் பார்வை இருந்து பின்னர் பார்வை இழந்தவர்களிடம் மட்டுமே தற்போது சோதிக்கப்படுகிறது. எனினும் பிறக்கும்போதே பார்வையற்றவர்களுக்கும் இது பார்வைத் திறனைக் கொடுக்கும் என்று எலான் மஸ்க் கூறுகிறார்.
மேலும் இந்த சாதனத்தின் மூலமாக, முதலில் குறைவாக இருக்கும் திறன், பின்னர் சாதாரண மனிதர்களைவிட அதிகமாக இருக்கும் என்றும் சோதனையில் நியூராலிங்க் கருவியால் எந்த குரங்கும் இறக்கவில்லை, காயம் அடையவில்லை என்றும் தெரிவித்தார்.
உலகளவில் 4.3 கோடி பேரும் இந்தியாவில் அதிகபட்சமாக 80 லட்சம் பேரும் பார்வையற்றவர்களாக இருக்கின்றனர். 29.5 கோடி பேர் பார்வைக் குறைபாடுடனும் இருக்கின்றனர்.
சேதமடைந்த விழித்திரை அல்லது பார்வை நரம்புகள் தொடர்பின்றி இந்த சாதனங்கள் நேரடியாக மூளைக்கு சிக்னல்களை அனுப்புவதன் மூலம் செயல்படுகின்றன. கண்ணில் உள்ள புறணி தரவுகளைச் செயல்படுத்துகிறது. மூளையில் உள்ள சிப்புகள் வெளியிடும் மின்னோட்டம், நியூரான்களைத் தூண்டி காட்சி உணர்வை உருவாக்குகின்றன. ஆனால் உண்மையான ஒளி இருக்காது. ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட காட்சிகளைத் தரும்.
தற்போதைய சோதனையாளர்களுக்கு அன்றாடத் தேவைக்கான வழியைக் காண்பித்தல், பொருள்களை அடையாளம் காணுதல் ஆகியவற்றுக்கு உதவுகின்றன.
பாதகமான விளைவுகள் ஏதும்ஏற்படா வண்ணம், சரியான மின்னூட்ட அளவு இருப்பதை உறுதி செய்வது என இதில் சவால்களும் உள்ளன. இந்த சாதனங்களின் நீண்ட ஆயுள்காலமும் சவாலாக இருக்கிறது.