வியட்நாமில் குடும்பமே பலியான பரிதாபம் – தீ விபத்து தொடர்பில் அதிர்ச்சி தகவல்
வியட்நாம் தலைநகர் ஹனோயின் குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீயில் 50க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனரா என்று அறிய உற்றார் உறவினர் சவக்கிடங்கைச் சுற்றிக் கூடியுள்ளனர்.
அந்த 10 மாடிக் கட்டடத்தில், ஒரே ஓர் அவசரகால வெளியேறும் வழி மட்டுமே இருந்தது. செவ்வாய்க்கிழமை இரவு, குடியிருப்பாளர்கள் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் தீப்பற்றியது.
தீயிலிருந்து, தப்பிக்க மக்கள் கூச்சலிட்டதைக் கேட்க முடிந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறினர். சம்பவத்தில் 56 பேர் உயிரிழந்த நிலையில் 37 பேர் காயமுற்றனர். உயிரிழந்தவர்களில் மூவர், சிறுவர்கள் என தெரியவந்துள்ளது.
சடலங்களை அடையாளம் காண்பதில் சிரமம் நீடிக்கிறது. குடும்பமே பலியாகிவிட்டதாய்ச் சிலர் அழுது புலம்பினர். மகளை இழந்ததை உறுதி செய்தார் கண்ணீரும் கம்பலையுமாய் நின்ற நபர் ஒருவர் தெரிவித்துள்ளனர்.
ஹனோயின் குறுகலான சந்து ஒன்றில் உள்ளது இந்தக் குடியிருப்புக் கட்டடம். இங்கு பல இளம் குடும்பங்கள் வசித்துவந்தன. பலர் படிக்கவோ வேலை பார்க்கவோ ஹனோய் வந்தவர்கள். 150 பேர் வசித்த கட்டடத்தின் வெளிப்புறத்தில், அவசர காலத்தில் இறங்க ஏணியும் இல்லை.
கட்டடத்தில் தீப் பாதுகாப்பு வசதிகள் இல்லாதது குறித்துப் பல முறை புகார் அளித்ததாய் அங்கு வசிக்கும் ஒருவர் தெரிவித்தார். மக்கள், ஒரே இரவில் இப்படி உயிரிழந்த அநியாயத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.