Site icon Tamil News

சடலத்தை வீதியில் வைத்து போராட்டம் செய்த பொது மக்கள்

திக் ஓயா கால்வாயில் விழுந்து உயிரிழந்தவரை தாக்கிய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, சடலத்தை பிரதான வீதியில் வைத்து உறவினர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திக் ஓயா கால்வாயில் விழுந்து (11) உயிரிழந்த ஒரு பிள்ளையின் தந்தையான சந்திரசேகரன் சுரேஷ் (28) என்பவரை சிலர் தாக்கியதாக உயிரிழந்த நபரின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதற்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்து தண்டிக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இன்று பிற்பகல் சுமார் ஒரு மணித்தியாலம் பிரதான வீதியில் சடலத்தை வைத்துப் போராட்டம் நடத்தினர்.

போதையில் இருந்த போது சந்திரசேகரனை சில குழுவினரால் தாக்கப்பட்டதாகவும், பின்னர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த அவர் மனமுடைந்து திக் ஓயா கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 12ஆம் திகதி ஹட்டன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து திக் ஓயா கால்வாயில் இருந்து உயிரிழந்த இளைஞரின் சடலத்தை மீட்டனர்.

சடலத்தின் பிரேத பரிசோதனை திக் ஓயா ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒஸ்போன் தோட்டப் பகுதியிலிருந்து பிரதான வீதியை மறித்து சடலத்தை சுமார் ஒரு மணித்தியாலம் வீதியில் வைத்து போராட்டம் நடத்தப்பட்டதால் ஹட்டன் நோர்டன்பிரிட்ஜ் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version