பிலிப்பைன்ஸ் போர்களைத் தூண்டும் தொழிலில் இல்லை ; அதிபர் மார்கோஸ்
பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர், தமது நாடு போர் தூண்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்றும் பூசல்களை அமைதியான முறையில் தீர்க்க எப்போதுமே நோக்கம் கொண்டிருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
சீனாவுடன் கடல்சார்ந்த மோதல்கள் அதிகரித்துவரும் நிலையில், அவரின் கருத்து வந்துள்ளது.
“நாட்டைத் தற்காப்பதில், அனைத்து விவகாரங்களுக்கும் அமைதியான முறையில் தீர்வுகாண்பதற்கான பிலிப்பீனோ இயல்புக்கு நாம் உண்மையாக இருக்கிறோம்,” என்று திரு மார்கோஸ் கூறினார்.
தென்சீனக் கடல்பகுதியை மேற்பார்வையிடும் பொறுப்பைக் கொண்டுள்ள மேற்குத் தளபத்தியப் பிரிவின் படையினரிடம் ஆற்றிய உரையில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
ஆக அண்மையில், பிலிப்பீன்ஸ் கடல்துறை அதிகாரிகளும் சீனக் கடலோரக் காவற்படையினரும் சென்ற வாரம் அந்த சர்ச்சைக்குரிய கடல்பகுதியில் மோதினர்.
அதில் பிலிப்பீனோ மாலுமி ஒருவர் கடுமையாகக் காயமுற்றதாகவும், தனது கப்பல்கள் சேதமுற்றதாகவும் பிலிப்பீன்ஸ் ராணுவம் கூறியது.
“நமது கடமைகளை நிறைவேற்றும் வேளையில், நாம் வேண்டுமென்றே யாருக்கும் காயங்களையோ தீங்கையோ ஏற்படுத்த மாட்டோம்,” என்று திரு மார்கோஸ் கூறினார்.அவர் தமது உரையில் சீனாவைக் குறிப்பிடவில்லை.