Site icon Tamil News

ராஜ்குமாரியின் மரணம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வெலிக்கடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வீட்டுப் பணிப்பெண்ணின் மரணம் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல நாடக தயாரிப்பாளரும் வர்த்தக பிரமுகருமான சுதர்மா நெத்திகுமாரவின் வீட்டில் பணிபுரிந்த 42 வயதான ஆர்.ராஜ்குமாரியின் மரணம் தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

திருட்டு குற்றச்சாட்டில் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஜூன் மாதம் 21ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தலைமை நீதவான் பண்டார இளங்கசிங்க உத்தரவு பிறப்பித்தார்.

இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் உடல் வீதியில் போடப்பட்டிருந்த நிலையில் மீட்டதாக பொலிஸ் அதிகாரிகள் கூறினாலும் அவ்வாறு சடலம் ஒன்று மீட்கப்படும் போது கையாள வேண்டிய சட்ட நடைமுறைகள் இருப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மஞ்சுள பத்திராஜ தெரிவித்தார்.

அப்படியான சம்பவம் நடக்கும் போது நீதிமன்ற படிவங்களை நிரப்புதல், குறிப்பெடுத்தல், வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிவித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

என்ற போதிலும் இந்த சம்பவத்தில் அப்படியான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அது குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு உத்தரவிட வேண்டும் என சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

இதனடிப்படையில் உயிரிழந்த பெண் இறுதியாக இருந்த இடத்தின் சீ.சீ.டி.வி காட்சிகள் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் குறிப்புகளை பெற்று விசாரணை நடத்துமாறு நீதவான் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

 

Exit mobile version