தண்ணிமுறிப்பில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களின் பூர்வீக காணிகள்!! கண்ணீருடன் தாய்யொருவர் விடுத்துள்ள கோரிக்கை
நடு வயலுக்குள்ளால் கல்லுகளை தாட்டு வயல் செய்ய விடாது தடுத்து வைத்திருக்கிறார்கள் என முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பூர்வீகத்தையுடைய தாய்யொருவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
தண்ணிமுறிபபு குருந்தூர் மலை பகுதியில் தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகளை விடுவிப்பது தொடர்பில் நேற்றையதினம் (28) அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதானித்திருந்தனர்.
குறித்த கள விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தாய்யொருவர் கூறுகையில்,
”எங்களுடைய காணிகளை பிடித்து வைத்திருக்கிறார்கள். நாங்கள் இடம்பெயர்ந்து சென்று பல வருடங்களாகியும் விவசாயம் செய்யும் காணிகளை கூட தடை செய்திருக்கிறார்கள்.
நடு வயலுக்குள்ளால் கல்லுகளை தாட்டு எங்களை வயல் செய்ய விடாது தடுத்து வைத்திருக்கிறார்கள். நாங்கள் எத்தனையோ வருடங்களாக அலைந்து திரிகிறோம்.
கொழும்புக்கு சென்று ஜனாதிபதியை சந்தித்தும் வந்தோம். அப்போது உங்களுடைய காணி உங்களுக்கு தான் அம்மா வேறு யாருக்கும் இல்லை. நீங்கள் யோசிக்க வேண்டாம். போங்கோ என கூறியிருந்தார்.
கடைசி விஜயம் என கூறிவிட்டு வந்து எல்லாத்தையும் குழப்பீட்டு போகிறார்கள். இன்றும் விடுவித்து தரவில்லை. நாங்கள் இதற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இதற்கு ஒரு முடிவு வேணும். எங்களுடைய காணியை எங்களுக்கு தாங்கோ.
வேறு இடங்களிலும் எமக்கு காணி இல்லை. யாரிடமாவது விசாரித்து பாருங்கள். தண்ணிமுறிப்பில் தான் எமக்கு காணி . குடியிருப்பு காணி என்றாலும் , வயல் காணி என்றாலும் இங்கு மட்டும் தான் உள்ளது. எனக்கு எட்டு பிள்ளைகள். இவர்களுக்காவது இந்த காணிகள் வேண்டும். என்னத்துக்காக எமது காணிகளை பிடித்து வைத்து கொண்டிருக்கிறார்கள்.
இனி எங்களால் ஏலாது. காணியின் முடிவை வெகு விரைவில் விடுவித்து தர வேண்டும் என கேட்டு கொள்கிறேன்” என தெரிவித்தார்.