தூங்கா நகரங்களாக மாற்றமடையும் இலங்கையின் பல பகுதிகள்!
இலங்கையில் இந்த வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பதற்கு அவசியமான ஊக்குவிப்புத் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே இதனை தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதெனவும், அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக டெக்ஸி சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் பதில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் சுற்றுலா ஈர்ப்பு மிக்க நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் ஆரம்ப பகுதியில் 10 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வருட இறுதிக்குள் 15 இலட்சம் பேரை நாட்டிற்கு வரவழைக்க முடியும் என எதிர்பார்த்திருப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருடத்தின் இறுதி காலப்பகுதியிலேயே நாட்டுக்கு சுற்றுலாப் பிரயாணிகளில் வருகை அதிகமாக காணப்படும் நிலையில், பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெருமளவான சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு வரவழைக்க வேண்டியது அவசியமாகும் என சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.