அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!! அவசர உதவி கோரிய பெண்ணையே சுட்டு கொன்ற பொலிஸார்
அமெரிக்காவில் காவல்துறைக்கு அவசர அழைப்பு விடுத்த கறுப்பினப் பெண், விசாரணைக்குச் சென்ற பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கறுப்பினத்தோர் மீது காவல்துறையினர் பாரபட்சம் காட்டுவதாக நீடிக்கும் புகார்களின் மத்தியில், அண்மை சம்பவமாக இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் நியானி ஃபின்லேசன் என்ற 27 வயது பெண், இரவு நேரத்தில் அமெரிக்காவின் அவசரகால உதவிக்கான 911 என்ற எண்ணை அழைத்தார். ஆண் ஒருவரால் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக, தனது வீட்டிலிருந்து நியானி அவசர அழைப்பு விடுத்தார். கவுண்டி ஷெரிப் அலுவலகத்திலிருந்து உடனடியாக லான்காஸ்டரின் அடுக்குமாடி குடியிருப்புக்கு பொலிஸார் விரைந்தனர்.
அங்கே குடியிருப்பு வளாகம் ஏற்கனவே களேபரமாக இருந்தது. குறிப்பிட்ட வீட்டுக்குள் சண்டைச் சச்சரவும், அலறலுமாக இருப்பதை அக்கம்பக்கத்தார் சுட்டிக்காட்டினர். அது நியானியின் வீடு என்பதை உறுதி செய்த பொலிஸார், வீட்டுக் கதவை திறக்குமாறு கோரினார். ஆனால் உள்ளிருந்து கதவு திறக்கப்படாததோடு, அலறல் சத்தம் அதிகமாகவே, கதவை உடைத்து பொலிஸார் உள்ளே நுழைந்தனர். அங்கே அவர்கள் கண்ட காட்சி பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்குச் சென்றது.
கைவசம் எட்டங்குல சமையல் கத்தியோடு ஆண் ஒருவர் மீது பாய முயன்ற பெண்ணை அக்கணமே பொலிஸார் சுட்டு வீழ்த்தினர். இதில் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்தில் உடனிருந்த நியானியின் 9 வயது மகள் மற்றும் நியானியின் ஆண் நண்பர் ஆகியோரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர். இதில் நியானி மற்றும் அவரது ஆண் நண்பர் இடையிலான குடும்பச் சண்டனை காரணமாக நியானி 911 அவசர அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் பொலிஸார் சம்பவ இடத்துக்குள் நுழைந்தபோது கையில் கத்தியுடன் இருந்த நியானியை அவசரத்தில் சுட்டுக்கொன்றதும் தெரிய வந்தது.
அமெரிக்காவில் கறுப்பினத்தோரிடம் காவல்துறையினர் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்றன. அவற்றை உறுதி செய்வது போன்று மூன்றாண்டுகளுக்கு முந்தைய ஜார்ஜ் பிளாய்டு கொலைச் சம்பவம் முதல் பல்வேறு அக்கிரமங்கள் அமெரிக்காவில் அரங்கேறி வருகின்றன. இனவெறி அடிப்படையிலான அலட்சியம் காரணமாக நேரிடும் இந்த குற்ற சம்பவங்களில் அமெரிக்க பொலிஸார் கைது செய்யப்படுவதும் நடந்து வருகிறது.