பிலிப்பீன்ஸில் பணத்தைத் திருடி, விழுங்கிய விமான நிலைய அதிகாரியால் அதிர்ச்சி
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் பயண உடைமைச் சோதனை அதிகாரி ஒருவர், பயணி ஒருவரின் பணப்பையில் இருந்து 300 அமெரிக்க டொலர் மதிப்புள்ள பணத்தைத் திருடியுள்ளார்.
பின்னர் அவர் அதனை வாய்க்குள் போட்டு விழுங்கியதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுகுறித்த காணொளி வெளியானதை அடுத்து, அப்பெண் அதிகாரி உட்பட நான்கு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நினோய் அக்கினோ அனைத்துலக விமான நிலையத்தில் பயணி ஒருவர் 300 டொலர் மதிப்புள்ள பணத்தைத் தொலைத்துவிட்டதாகச் சோதனைச்சாவடி மேற்பார்வையாளர் ஒருவர் கூறினார்.
இதனையடுத்து, பாதுகாப்புப் படக்கருவியில் பதிவான காணொளியை ஆராய்ந்தபோது, அப்பெண் அதிகாரி அப்பணத்தைத் திருடி, வாய்க்குள் போட்டு விழுங்கியது தெரிந்தது.
ஆனாலும், அப்பெண் அதிகாரி பணத்தைத் தான் திருடவில்லை என மறுத்துவருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், விசாரணை அதிகாரிகள் திரட்டிய சான்றுகளைப் பார்க்கையில், அப்பெண் அதிகாரிமீதும் அவருடைய கூட்டாளிகள் மூவர்மீதும் வழக்கு தொடுக்க தங்களுக்குப் போதுமான சான்றுகள் உள்ளதாகக் கருதுகிறோம் என்று விமான நிலைய அதிகாரி அப்லாஸ்கா கூறினார்.
சந்தேகப் பேர்வழிமீது நிர்வாக, குற்றவியல் வழக்கு தொடுக்குமாறு போக்குவரத்து அமைச்சர் ஜேமி பாடிஸ்டா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.