லியோ படத்தை இலங்கையில் நிறுத்துங்கள்… தமிழ் அரசியல்வாதிகள் விஜய்க்கு கடிதம்??
லியோ திரைப்படத்தை இலங்கையில் எதிர்வரும் 20ம் திகதி திரையிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.
எனினும் குறித்த கடிதம் போலியானது என இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் இலங்கை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் செல்வம் அடைகலநாதன் ஆகியோரினால், நடிகர் விஜயிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதை போன்ற கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
“இது போலியான கடிதம். நாம் அப்படி கோரிக்கை விடுக்கவில்லை. நான் அவ்வாறான கடிதத்தில் கையெழுத்திடவில்லை. யாரோ திட்டமிட்டு செய்துள்ளனர்.” என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் தெரிவித்தார்.