இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் – நாமல் வெளியிட்ட அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்வைக்கப்படும் வேட்பாளரின் நியமனம் இம்மாத இறுதியில் மேற்கொள்ளப்படும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொறிமுறையானது 4 அல்லது 6 வாரங்களுக்குள் ஜனாதிபதி வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதற்கு பலமாக இருப்பதாக அவர் கூறினார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை நியமனம் செய்வதில் தாமதம் ஏற்படுவது ஏன் என பல்வேறு தரப்பினர் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளரை உடனடியாக அறிவிக்க வேண்டிய தேவை தமது கட்சிக்கு இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியின் கொள்கைகளுக்கு இணங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய வேட்பாளர் நியமிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
வரவிருக்கும் எந்த தேர்தலையும் சந்திக்க தானும் தனது கட்சியும் தயாராக உள்ளோம் என்றார்.
அமைப்பின் செயற்பாடுகள் தரை மட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.