முக்கிய ராணுவ தளபதியை அதிரடியாக நீக்கிய அதிபர் கிம்
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தமது முதன்மை ராணுவ தளபதியை அதிரடியாக நீக்கியதுடன், ஆயுத உற்பத்தியை அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், போர் பயிற்சிகள், போருக்கு தயார் படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் கிம் ஜாங் உன் ஊக்கப்படுத்தியுள்ளார். வடகொரியாவின் எதிரிகளை எதிர்கொள்வது தொடர்பில் கிம் ஜாங் உன் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை முன்னெடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தான், முக்கிய ராணுவ தளபதி Pak Su Il அதிரடியாக நீக்கப்பட்டதுடன், அந்த பொறுப்புக்கு Ri Yong Gil என்பவர் நியமிகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட கூட்டத்தின் முதன்மையான விவாதப் பொருள், போருக்கு தயாராக வேண்டும் என்பதே என கூறுகின்றனர். அத்துடன், ஆயுத உற்பத்தியை முடுக்கி விடவும் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
கடந்த வாரம் ஆயுத தொழிற்சாலைகளை பார்வையிட்ட கிம், ஏவுகணை இயந்திரங்கள், பீரங்கி மற்றும் பிற ஆயுதங்கள் அதிக எண்ணிக்கையில் தயாராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.