சீனாவில் பரவும் நிமோனியா: இந்தியாவில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய 5 மாநிலங்கள்
சீனாவில் நிமோனியா தொற்று வேகமாகப் பரவிவருவதாக செய்தி வெளியானது.
இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவுக்குப் பிறகு தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், உத்தராகண்ட், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன.
கர்நாடகாவில், பருவகால புளூ (seasonal flu) வைரஸின் பாதிப்புகளை முன்னிட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் ராஜஸ்தானின் மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை அதன் ஊழியர்களை விழிப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது. ராஜஸ்தான் சுகாதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரா சிங், காணொலி மூலம் அதிகாரிகளிடம் பேசுகையில், “தற்போது நிலைமை கவலைக்கிடமாக இல்லை , ஆனால் மருத்துவ ஊழியர்கள் மாநிலம் முழுவதும் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். மேலும் தொற்று நோய்களைத் தடுக்க முழு விழிப்புடன் பணியாற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனர், மாநிலத்தில் சுவாச நோய்களுக்கான கண்காணிப்பை முடுக்கிவிடுமாறு சுகாதாரத்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நோய் கண்காணிப்பை அதிகரிப்பதுடன், நோயாளிகளை நிர்வகிப்பதற்கான வசதிகளை பலப்படுத்தவும் சுகாதாரத்துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சீனாவில் பரவி வரும் நிமோனியா காய்ச்சல் அதிக பாதிப்புகளை உருவாக்கி வருவதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு, மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அவசர ஆலோசனை கடிதத்தை எழுதியது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: சீனாவில் பரவி வரும் நிமோனியா வைரஸ் அதிக பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. குறிப்பாக, இந்த வகை வைரஸ் அதிகளவில் குழந்தைகளிடம் சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சீனாவில் பொது சுகாதார நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.