Site icon Tamil News

Apple Watch சூடாகும் பிரச்சனை இனி இல்லை

சமீப காலமாக ஆப்பிள் தயாரிப்புகளில் பல பிரச்சனைகள் ஏற்படுவதை நாம் பார்த்து வருகிறோம். சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமான ஐபோன் 15 சீரிஸ் போன்களில் கூட விரைவில் சூடாவதாக பிரச்சனை எழுந்த நிலையில், தற்போது ஆப்பிள் வாட்ச் யூசர்களும் இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார்கள். சில சமயங்களில் வாட்ச் அதிகமாக சூடாவதாகவும், இதனால் அதன் பேட்டரி விரைவில் தீர்ந்துவிடுவதாகவும் புகார் எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து ஆப்பிள் வாட்ச் யூசர்கள் தங்கள் கவலைகளை பல்வேறு தளங்களிலும் சோசியல் மீடியாவிலும் பதிவிட்டு வந்த நிலையில், அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் கவனத்திற்கு சென்றுள்ளதாக தெரிகிறது.

இந்தப் பிரச்சனைகளை எப்படி தீர்க்கப் போகிறோம் என இதுவரை ஆப்பிள் தரப்பிடமிருந்து எதுவும் கூறப்படவில்லை என்றபோதிலும், இதை சரிசெய்ய விரைவில் வாட்ச் OS-ல் அப்டேட் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பிரச்சனை குறித்து ஆப்பிள் தரப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்த மேலதிக தகவல்கள் எதுவும் வெளியே கூறப்படவில்லை. முக்கியமாக எப்போது அப்டேட் செய்யபடும் என்ற விவரமோ அல்லது எதனால் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அல்லது சமீபத்தில் வெளியான ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடல் சூடாகிறது, அதற்கு என்ன காரணம் போன்ற எதுவும் ஆப்பிள் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

ஒருவேளை watchOS-ல் பிரச்சனை என்றால், இதே தளத்தைப் பயன்படுத்தி வரும் கோடிக்கணக்கான ஆப்பிள் வாட்ச் பயனாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தப் பிரச்சனையால் எத்தனை ஆப்பிள் வாட்ச் யூசர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற எண்ணிக்கையும் தெரியவில்லை. iOS 17 வெளியான போதும் இதேப் போன்ற பிரச்சனை ஐபோனில் ஏற்பட்டது. இதை தீர்க்கவும் ஐபோன் யூசர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளை சரி செய்யவும் உடனடியாக iOS 17.1 அப்டேட்டை வெளியிட்டது ஆப்பிள்.

ஒருவேளை இந்தப் பேட்டரி தீர்ந்து போகும் பிரச்சனை watchOS 10.1.1 அப்டேட்டில் சரி செய்யப்படும் என சில பத்திரிக்கைகள் கூறினாலும், watchOS 10.2 அப்டேட்டில் தான் இது சரி செய்யக் கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஆனால் இந்த அப்டேட் வர எப்படியும் இன்னும் ஒரு மாதங்களுக்கு மேல் ஆகும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தற்போதைய நிலையில் ஆப்பிள் வாட்ச் தான் சிறந்த ஸ்மார்ட் வாட்ச்சுகளில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் சாம்சங் மற்றும் கூகுள் இதற்கு கடும் போட்டியாளராக இருக்கிறார்கள். சாம்சங் கேலக்ஸி வாட்ச் மற்றும் கூகுள் பிக்ஸெல் வாட்ச் சீரிஸ் போன்றவை புதிய OS தளங்களை பயன்படுத்துவதால், ஆப்பிள் வாட்ச்சிற்கு இவை கடுமையான சவாலை தருகின்றன.

Exit mobile version