மைக்ரோசாப்ட் சேவைகள் மீண்டும் முடங்கியது – ஐரோப்பாவை பாதித்த Outage 2.0
கடந்த வாரத்தில் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம், இந்த வாரமும், தொழில்நுட்ப கோளாறுகளை சந்தித்துள்ளது. இந்த முறை ஏற்பட்டக் கோளாறு, மைக்ரோசாப்ட் 365 பயன்பாடுகள் மற்றும் அஸூர் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளை பாதித்தது.
சில குறிப்பிட்ட மைக்ரோசாஃப்ட் பயன்பாடுகள் மற்றும் அஸூர் சேவைகளை அணுகுவதில் பயனர்கள் சிக்கல்களை அனுபவித்தனர்.
இந்த தொழில்நுட்பக் கோளாறு தொடர்பான தகவல்களை மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளது. இது தொடர்பாக X சமூக ஊடகத்தில் உறுதிப்படுத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனம், இந்த பிரச்சனை தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்களை மிகப் பெரிய அளவில் பாதித்த க்ரவுட்ஸ்ட்ரைக் செயலிழந்த ஒரு வாரத்தில் அடுத்த பிரச்சனை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. CrowdStrike விண்டோஸ், கணினிகளை செயலிழக்கச் செய்த பிழை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி, உலகளவில் பெரிய அளவிலான பிரச்சனைகளை ஏற்படுத்தியது.
இணைய பாதுகாப்பு கம்பெனியான கிரவுட்ஸ்டிரைக்கில் (CrowdStrike) ஏற்பட்ட பாதிப்பினால், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. உலகின் பெரும்பாலான வங்கிகள், செய்தி நிறுவனங்கள், ஐடி துறை என அனைத்தும் முடங்கியதால் சர்வதேச அளவில் பாதிப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் 911 சேவை, லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் உள்ளிட்ட பல முக்கிய தளங்கள் முடங்கிப்போயின.
விமான போக்குவரத்து முதல் மருத்துவமனை சேவைகள் வரை பாதிக்கப்பட்டதால், உலகளாவிய தொழில்நுட்பக் கோளாறாக இது மாறியது. அதற்கு ஒரு வாரத்திற்கு பிறகு தற்போது ஏற்பட்ட சிக்கலில், மைக்ரோசாப்ட் 365 பயன்பாடுகள், அஸூர் சேவைகள் போன்றாவை வேலை செய்வதை நிறுத்தின.
தற்போது பல மைக்ரோசாஃப்ட் 365 சேவைகள் மற்றும் அம்சங்களுடன் அணுகல் சிக்கல்கள் மற்றும் தரமிழந்த செயல்திறனுக்கான காரணங்களை ஆராய்ந்து வருகிவதாக தெரிவித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம், நிர்வாக மையத்தில் MO842351 இன் கீழ் கூடுதல் தகவல்களைக் கொடுத்துள்ளது. இந்தத் தகவலை X ஊடகத்தில் மைக்ரோசாப்ட் 365 தெரிவித்திருந்தது.
அதில், “அஸூர் போர்ட்டலை பாதிக்கும் சிக்கலை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். கூடுதல் விவரங்கள் கிடைக்கும்போது வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் உள்ள பயனர்களை பிரச்சினை பாதித்துள்ளது என்பதை Azure உறுதிப்படுத்தியது.
CrowdStrike புதுப்பித்தலின் காரணமாக ஏற்பட்ட செயலிழப்பின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் முற்றிலுமாக வெளிவராத நிலையில் ஒரே வாரத்தில் இந்த தொழில்நுட்ப சிக்கல் பயனர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது மில்லியன் கணக்கான Windows PC பயனர்களையும் மைக்ரோசாப்ட் 365 பயன்பாடுகளையும் பாதித்ததாலும், இது உலகளாவிய பாதிப்பாக இல்லாமல், பல பிராந்தியங்களில் சிக்கல் ஏற்படுத்தியது. சிலருக்கு தான் பாதிப்பு ஏற்பட்டதால், இதை பெரிய செயலிழப்பு என்று வகைப்படுத்த முடியாது.