பிணைக்கைதிகளின் மரணத்தை தொடர்ந்து இஸ்ரேலில் முன்னெடுக்கப்பட்ட பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள்
காஸாவில் ஆறு பிணைக் கைதிகளின் மரணத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் 1ஆம் திகதி இஸ்ரேல் முழுவதும் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இஸ்ரேலியப் பிணையாளிகளை விடுவிக்கும் சண்டைநிறுத்த உடன்படிக்கையை நாட்டின் தலைமைத்துவம் செய்துகொள்ளத் தவறியதால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.ஜெருசலம், டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களில் 500,000 பேர்வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் மதிப்பிட்டுள்ளன.
பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு எஞ்சியுள்ள 101 பிணைக்கைதிகளை நாட்டுக்குக் கொண்டுவர மேலும் அதிகம் செய்யவேண்டும் என்று அவர்கள் கடுமையாகக் கோரிக்கை விடுத்தனர்.பிணைக்கைதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் உயிரிழந்து விட்டதாக இஸ்ரேல் மதிப்பிடுகிறது.
ஜெருசலத்தில் பிரதமரின் இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளை மறித்து போராட்டத்தில் இறங்கினர்.பிணைக்கைதிகளின் படங்களுடனான கொடிகளை ஏந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் டெல் அவிவின் முக்கிய நெடுஞ்சாலையில் திரண்டிருந்ததைப் படங்கள் காட்டின.சாலைகளை மறித்த ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி காவல்துறையினர் தண்ணீர் பீரங்கிகள் பயன்படுத்தியதை இஸ்ரேலியத் தொலைக்காட்சிப் படங்கள் காண்பித்தன.
இதுவரை 29 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.இந்நிலையில், தொழிற்சங்கத் தலைவர்கள் செப்டம்பர் 2ஆம் திகதி ஒருநாள் போராட்டம் நடத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
போரால் உடைந்துபோயிருக்கும் பாலஸ்தீனத்தில் உள்ள சிறாருக்கு வாதச் சொட்டு மருந்து கொடுக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், காஸாவின் தென் பகுதியில் அமைந்திருக்கும் ரஃபா நகரில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றிலிருந்து பிணைக்கைதிகளின் சடலங்களை மீட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்தது.
கார்மெல் காட், ஹெர்ஷ் கோல்டுபர்க்-பொலின், ஈடன் யெருஷால்மி, திரு அலெக்சாண்டர் லொபனோவ், ஆல்மோக் சருசி, ஒரி டனினோ ஆகியோரின் சடலங்கள் இஸ்ரேலுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக ராணுவப் பேச்சாளர் டானியல் ஹகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஹமாஸ் அமைப்பினர் அவர்களை 48 மணி நேரத்துக்கும் 72 மணி நேரத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அருகிலிருந்தே பலமுறை சுட்டதை தடயவியல் ஆய்வுகள் உறுதிசெய்துள்ளதாக இஸ்ரேலிய சுகாதார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.