ஜார்கண்ட் – பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பழங்குடி இளைஞர் பலியான சோகம்!
ஜார்கண்ட் மாநிலம், கோட்டா மாவட்டத்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில், 30 வயது பழங்குடி இளைஞர் உயிரிழந்தார்.
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இருந்து 350 கி.மீ. தொலைவில் உள்ள படா டங்கா பாரா பகுதியைச் சேர்ந்த ஹரி நாராயண் பஹாரியா. இவர் நேற்று பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இதுதொடர்பாக, பொலிஸார் கூறிய தகவல்படி, கடந்த 16ம் திகதி, சுந்தர் பஹாரி பொலிஸில் மிரட்டி பணம் பறித்தல் தொடர்பாக ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக பொலிஸார், நேற்று மாலை படா டங்கா பாராவுக்குச் சென்றனர். அங்கு பெனாடிக் ஹெம்ப்ராம் என்பவரின் வீட்டைச் சோதனை செய்ய முயன்றனர். அப்போது, பொலிஸாரை கண்டதும் வீட்டில் இருந்து ஒரு நபர் தப்பி ஓடுவதை பொலிஸார் பார்த்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்நாத் யாதவ் அவரை பிடிக்க உத்தரவிட்டார்.
அந்த நபரை பிடிக்கும் பணியின்போது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், ஹரி நாராயண் பஹாரியா இடது தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்கவும், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கோட்டா காவல் கண்காணிப்பாளர் நாது சிங் மீனா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஹரி நாராயணன் பஹாரியாவின் சகோதரர் கம்தேவ் பஹாரியா, தனது சகோதரர் வீட்டை விட்டு ஓடியதாக காவல் துறையினர் கூறிய குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மேலும் அவரது உயிரிழப்புக்கு காரணமான காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.