800லிருந்து விஜய் சேதுபதி விலகியதற்கு நாமல் ராஜபக்ச வருத்தப்படுகின்றார்….
முத்தையா முரளிதரனின வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதற்கு ராஜபக்ச மகன் நமல் ராஜபக்ச வருத்தப்பட்டிருக்கிறார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன். தூஸ்ரா வகை பந்துகளை வீசும் அவர் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அவரது பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு பேட்ஸ்மேன்கள் நடுங்கிய காலம் ஒன்று உண்டு.
இந்தச் சூழலில் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்தப் படத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிபப்தாக இருந்தது. அதுதொடர்பான போஸ்டரும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேசமயம் எதிர்ப்பையும் சந்தித்தது.
முத்தையா முரளிதரன் ஈழ தமிழராக இருந்தாலும் சிங்களர்களுக்கு ஆதரவாக செயல்படக்கூடியவர். எனவே அவரது வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் என எதிர்ப்பு எழுந்தது.
தமிழர்களின் மனதில் இடம்பெற்றிருக்கும் விஜய் சேதுபதில் தமிழின விரோத போக்கில் செல்லக்கூடாது என்றும் பலர் கோரிக்கை வைத்தனர். பிரச்னை முற்றிப்போனதை அடுத்து விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகினார்.
இதனையடுத்து 800 படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக மாதுர் மிட்டல் எனும் பாலிவுட் நடிகர் நடிக்க கமிட்டானார். இவர் ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மகிமா நம்பியார், வேல ராமமூர்த்தி, நரேன் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
ட்ரெய்லரை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டார். முரளிதரன் கிரிக்கெட்டுக்குள் நுழைந்ததிலிருந்து, அவர் பந்தை எறிகிறார் என்ற சர்ச்சைவரை முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் ஒன்று விடாமல் இந்தப் படத்தில் காட்டப்பட்டிருப்பது ட்ரெய்லரில் தெரிகிறது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது ட்ரெய்லர்.
இந்நிலையில் 800 படம் குறித்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சே ட்வீட் செய்திருக்கிறார். அந்த ட்வீட்டில், “800 படத்தின் ட்ரெய்லரை பார்ப்பதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைகிறேன். இந்தப் படத்திலி
ருந்து விஜய் சேதுபதி விலகியது வருத்தமளிக்கிறது. அதேசமயம் படம் திட்டமிட்டபடி நடப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் பிராந்தியத்தில் இருக்கும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய வெற்றிய கதையாக இருக்கும். வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.