ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதியை சுட்டு கொன்ற இஸ்ரேல் படை
மேற்குகரை பகுதியில் கடந்த புதன்கிழமை அதிகாலை முதல் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்குகரையின் ஜெனின், நப்லஸ், டியூபஸ், துல்கரிம் ஆகிய நகரங்களில் இஸ்ரேல் படையினர் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு கரையில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களை குறிவைத்து அதிரடி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஹமாஸ் ஆயதக்குழுவின் மேற்கு கரையின் ஜெனின் நகர் பிரிவு முக்கிய தளபதி இஸ்ரேல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஜெனின் நகர் பிரிவு ஹமாஸ் ஆயுதக்குழு தளபதியாக செயல்பட்டு வந்த வாசிம் ஹசீம் உள்பட ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த 3 பேர் இன்று ஜெனின் நகரின் சபாப்டா நகரில் காரில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது அங்கு தேடுதல் பணியில் இருந்த இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் கார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஹமாஸ் தளபதி வாசிம் ஹசீம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதேவேளை, எஞ்சிய 2 பயங்கரவாதிகள் தப்பியோடினர். இதையடுத்து, தப்பியோடிய பயங்கரவாதிகளை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட ஹமாஸ் ஆயுதக்குழு ஜெனின் பிரிவு தளபதி இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் என இஸ்ரேல் படையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு தசாப்தங்களில் மேற்குக் கரையில் மிகப் பெரிய ஒன்றான இஸ்ரேலிய நடவடிக்கை தொடங்கியதிலிருந்து குறைந்தது 19 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸின் இஸ்ரேல் மீது ஏற்பட்ட தாக்குதல் மற்றும் காசாவில் அடுத்தடுத்த போர் ஆகியவற்றிலிருந்து மேற்குக் கரையில் வன்முறை அதிகரித்துள்ளது.