காஸாவின் மிகப்பெரிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
காஸாவில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபாலியா முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.
வடக்கு காஸா பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீதான வான்வழித் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலிய போர் விமானங்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார்.
ஹமாஸின் மத்திய ஜபாலியா பட்டாலியனின் தளபதி இப்ராஹிம் பீரி தாக்குதலுக்கு இலக்கானதாகவும், வெடிப்பில் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட ஹமாஸ் தலைவர் மறைந்திருந்த நிலத்தடி சுரங்கப்பாதையை தகர்ப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது படையெடுத்த ஹமாஸ் போராளிகளின் படுகொலைக்கு மூளையாக செயற்பட்டவர்களில் இப்ராஹிம் பீரியும் ஒருவர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலால் முகாம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம், தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறுகிறது.