சுலோவாக்கியா பிரதமரின் உடல் நிலை தொடர்பில் வெளியான தகவல்
சுலோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் பிக்கோ நேற்று பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டிருந்த சம்பவம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் அவர் உயிர்பிழைப்பார் என்று நம்புவதாகச் சுலோவாக்கியாவின் துணைப்பிரதமர் தோமஸ் தராபா கூறியுள்ளார்.
பிக்கோ உயிர்பிழைப்பார் என்று நம்புகிறேன். தற்போது அவரது உயிருக்கு ஆபத்து இல்லை, என அவர் குறிப்பிட்டுள்ளார்.
59 வயது பிக்கோ அமைச்சரவைக் கூட்டம் முடிந்து வெளியில் வந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டார்.
அவரது வயிற்றில் காயம் ஏற்பட்டது. பிக்கோ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் அவர் பல மணி நேரம் உயிருக்குப் போராடியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அவர் சுடப்பட்ட செய்தியால் பலர் அதிர்ச்சிக்குள்ளாயினர். பிக்கோவைச் சுட்டதாகச் சந்தேகிக்கப்படும் 71 வயது எழுத்தாளர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பிக்கோ சென்ற ஆண்டு சுலோவாக்கியாவின் பிரதமரானார்.