சிங்கப்பூரில் மக்களின் மரபணுவை சேகரிக்கும் பணி தொடர்பில் வெளிவந்த தகவல்
சிங்கப்பூரில் 100,000 பேரின் மரபணுவை சேகரிக்கும் திட்டம் பாதிக்கட்டத்தைத் தாண்டி உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது..
ஏறக்குறைய 50,000 பேரின் மரபணு முழுமையாகச் சோதிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் மக்களின் மரபணுக்களை அவ்வாறு செய்ய வேண்டும் என்னும் மாபெரும் குறிக்கோளை எட்டுவதற்கான முக்கிய படி இதுவாகும்.
2023ஆம் ஆண்டு டிசம்பர் நடுப்பகுதி நிலவரப்படி, ஏறக்குறைய 80,000 சிங்கப்பூர்வாசிகள் விரிவான சுகாதாரப் பரிசோதனை செய்துகொள்ள முன்வந்தனர்.
நாட்டின் ஆகப்பெரிய மக்கள்தொகை அடிப்படையிலான சுகாதார தரவுத்தளத்தை உருவாக்குவதில் உதவ அவர்களின் உயிரியல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
21க்கும் 84க்கும் இடைப்பட்ட வயதுடைய அவர்கள் ரத்தம், சிறுநீர் மற்றும் உமிழ்நீர் போன்ற தங்களது உயிரியல் மாதிரிகளை ஆய்வுக்காக அளித்தனர்.
அந்த நடவடிக்கையில் பங்கேற்றவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள், இன்னாருடையது என்று விவரம் குறிக்கப்படாமல், உரிய முறையில் அடைக்கப்பட்டு மரபணுவைப் பிரித்தெடுக்க அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் அவை வரிசைப்படுத்தப்பட்டன.
அந்த மரபணுத் தரவுகள் நன்கு ஆராயப்பட்டு, பத்திரப்படுத்தப்பட்டன. தொடர்ந்து, இல்லுமினா என்னும் மரபணுத் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிய, பாதுகாப்புமிக்க தரவுத்தளத்தில் அவை சேர்க்கப்பட்டன. ஒவ்வொரு வாரமும் 760க்கும் மேற்பட்ட மரபணுக்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன.
திட்டமிட்டபடி 100,000 பேரின் மரபணுக்களின் விவரங்களும் பாதுகாப்பான முறையில் சேகரிக்கப்பட்டால் அது ஆசியாவின் முன்னணி மரபணு தரவுத்தளங்களில் ஒன்றாக உருவாகும்.